ADDED : மார் 19, 2024 11:05 PM

துமகூரு : கோவிலில் தீபம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து, ஒன்றாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.
துமகூரு மாவட்டம், சிராவின் கவுடககெரைச் சேர்ந்தவர் தீக் ஷா, 6. மேலுகோட்டே முதன்மை துவக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13ம் தேதி மதியம் உணவு இடைவேளையின்போது, பள்ளியை விட்டு வெளியே வந்த சிறுமி, அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
அங்கு தீபம் ஏற்றியபோது, அவரது ஆடையில் தீப்பற்றியது. மளமளவென தீ பரவியதால் அலறினார். கோவிலில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்ந்து ஆறு நாட்களாக சிகிச்சை பெற்றும், நேற்று காலை உயிரிழந்தார்.
தகவல் அறிந்த பிளாக் கல்வி அதிகாரி கிருஷ்ணப்பா, ''இப்பள்ளியில் முதல் வகுப்பில் இருந்து ஏழாம் வகுப்பு வரை 75 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு நான்கு ஆசிரியர் - ஆசிரியைகள் பாடம் நடத்துகின்றனர்.
''இவர்களில் இருவர் அரசு ஆசிரியர்கள்; இருவர் ஒப்பந்த ஆசிரியர்கள். சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

