பல்கலை விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவர் பலி
பல்கலை விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவர் பலி
ADDED : மார் 14, 2024 04:20 AM
தொட்டபல்லாப்பூர், : பல்கலைக்கழக விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து, பி.டெக்., மாணவர் இறந்தார். தற்கொலையா என விசாரணை நடக்கிறது.
பெங்களூரு ரூரல் தொட்டபல்லாப்பூர் அருகே நாகதேனஹள்ளி கிராமத்தில், காந்தி தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை நிறுவன, பல்கலைக்கழகம் உள்ளது. ஆந்திராவின் கர்னுாலை சேர்ந்த பிரம்மசாய் ரெட்டி, 20, என்ற மாணவர், பி.டெக்., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, அறைக்கு வந்தார். நான்காவது மாடியில் நடந்து சென்றபோது, கீழே விழுந்து உயிரிழந்தார். இதுபற்றி அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பிரம்மசாய் ரெட்டியுடன் அறையில் தங்கி இருந்த, மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். கால்தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்தாரா என விசாரணை நடக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்த ஒரு மாணவி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடந்த மாதம் 6ம் தேதி, விடுதி மாடியில் இருந்து குதித்து, ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், தொடர்ந்து உயிரிழப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

