ADDED : செப் 24, 2025 12:18 AM
புதுடில்லி:சிக்னலை கடக்க அதிவேகமாக சென்ற மின்சார ரிக் ஷா கவிழ்ந்து பள்ளி மாணவி உயிரிழந்தார். காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மத்திய டில்லி பஹர்கஞ்ச் சவுக்கில் நேற்று முன் தினம் காலை 7:30 மணிக்கு, திலீப் என்பவர் மின்சார ரிக் ஷாவில் மூன்று மாணவியருடன் ஜாஹித் என்பவர் பயணம் செய்தார். சிக்னல் விழுவதற்குள் சாலையைக் கடக்க வேண்டும் என அதிவேகமாக ஓட்டினார். கட்டுப்பாட்டை இழந்த ரிக் ஷா தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. வண்டியில் இருந்த மாணவியர் தூக்கி வீசப்பட்டனர்.
பலத்த காயம் அடைந்த மாணவியர் மற்றும் ஜாஹித் ஆகிய நான்கு பேரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த 16 வயது மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில், விபத்து ஏற்பட்டவுடன் ரிக் ஷா டிரைவர் திலீப்பை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் ரிக் ஷாவை பறிமுதல் செய்து திலீபை கைது செய்தனர்.