போக்குவரத்து நெரிசல் காரணமாக தேர்வு மையத்துக்கு 'பறந்த' மாணவர்
போக்குவரத்து நெரிசல் காரணமாக தேர்வு மையத்துக்கு 'பறந்த' மாணவர்
ADDED : பிப் 18, 2025 12:50 AM

சதாரா: மஹாராஷ்டிராவைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் ஒருவர், போக்குவரத்து நெரிசலால் தேர்வுக்கு தாமதமானதால், 'பாராகிளைடிங்'கில் பறந்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
மஹாராஷ்டிராவின் சதாரா மாவட்டம் மலைகள் சூழ்ந்த சுற்றுலா தலம். இங்கு, 'பாராகிளைடிங்' எனப்படும் பறக்கும் விளையாட்டு பிரபலம். சுற்றுலா பயணியரை பாராகிளைடிங் அழைத்து செல்லும் ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன.
இங்குள்ள பஞ்ச்கனி என்ற இடத்தில், சமர்த் மஹாங்கடே என்ற இளைஞர் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். அருகே உள்ள கிராமத்தில் முதலாமாண்டு பி.காம்., படித்து வருகிறார். சமீபத்தில் தேர்வு எழுத செல்லவேண்டிய சமர்த், கடையில் வேலை பளு காரணமாக தேர்வுக்கு தாமதமாக கிளம்ப நேர்ந்தது.
தேர்வு துவங்க 20 நிமிடங்கள் மட்டுமே இருந்தது. அவரது கடையில் இருந்து கல்லுாரி 15 கி.மீ., தொலைவில் உள்ளது.
அன்றைய தினம் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்ததால், தேர்வுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உடனே மாற்று வழி யோசித்த மாணவர் சமர்த், பாராகிளைடிங் பயிற்சி மையம் நடத்தி வரும் கோவிந்த் யேவாலே என்பவரை அணுகினார்.
விஷயத்தை கூறியதும், கோவிந்த் உதவ முன்வந்தார். பயிற்சி பெற்ற வீரரின் உதவியுடன், மாணவர் சமர்த்தை பாராகிளைடிங் வாயிலாக தேர்வு மையத்துக்கு அனுப்பி வைத்தார்.
பஞ்ச்கனியில் இருந்து தேர்வு நடந்த பசார்னி கிராமத்துக்கு பறந்த மாணவர் சமர்த், சில நிமிடங்களில் தேர்வு மையத்தில் தரையிறங்கி தேர்வு எழுதினார்.
இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழத்தியது.

