ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் தொடரும்: மாநில அரசு உறுதியை ஏற்க மறுப்பு
ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் தொடரும்: மாநில அரசு உறுதியை ஏற்க மறுப்பு
UPDATED : ஆக 09, 2026 08:01 PM
ADDED : ஆக 09, 2026 07:59 PM

ராஞ்சி: ஜார்க்கண்டில் தேர்வு முறைகேடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என மாநிலஅரசு தெரிவித்த நிலையில், அதனை ஏற்க மறுத்துள்ள மாணவர்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்டில் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 25ம் தேதி முதல் ராஞ்சியில் நடக்கும் போராட்டம், இன்று(ஆகஸ்ட் 09) 16 வது நாளை எட்டியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மூன்று பேரின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, டாக்டர்கள் கண்காணிப்பில் போராட்டம் நடக்கிறது. இன்று மாணவர்கள் அமைப்புடன் ஜார்க்கண்ட் அரசு பிரதிநிதிகள் 2வது கட்ட பேச்சு நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு மாணவர் தலைவர் ரவிந்திர பஸ்வான் கூறியதாவது: மாணவர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், சில பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.தேர்வில் நடந்த மோசடி தொடர்பாக மாநில புலனாய்வுத்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், மாணவர்களின் கோரிக்கையான, சிபிஐ விசாரணைக்கு ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக, ஓய்வு பெற்ற நீதிபதிதலைமையில் விசாரணை நடத்தவும், அதில் நிதி முறைகேடு நடந்தால், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணை கோரிக்கை ஏற்கப்படும் வரை மாணவர்களின் போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் சுதிவ்யா குமார் கூறியதாவது: ஜேஎஸ்எஸ்சி சிஜிஎல் தேர்வு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிதலைமையில் விசாரணை நடத்தப்படும். தேர்வு சீர்திருத்தம் தொடர்பாக ஐஐடி, ஐஐஎம் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். தேர்வில் நடந்த நிதி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்வோம். தேர்வு முறைகேடு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதுடன் 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
முதல்வர் கோரிக்கை
முன்னதாக முதல்வர் ஹேமந்த் சோரன் கூறுகையில், தேர்வில் நடந்த முஐறகேடுகள் குறித்து வெளிப்படையாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்போம். அனைத்து பிரச்னைகளும் பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வு காணப்படும். சமூக விரோதிகள் மாநிலத்தில் ஜனநாயகத்தை இடையூறு செய்ய முயற்சி செய்கின்றனர். மாணவர்கள் போராட்டம் அரசியல் ஆக்கக்கூடாது. இந்த முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ராஜினாமா
இதனிடையே ஜார்க்கண்ட் பொதுத்தேர்வு கமிஷனின் 3 உறுப்பினர்களுக்கு சிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அவர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதனை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.
