மாணவர் போராட்டம் மேலும் தீவிரம் உ.பி., அரசின் தீர்வை ஏற்க மறுப்பு
மாணவர் போராட்டம் மேலும் தீவிரம் உ.பி., அரசின் தீர்வை ஏற்க மறுப்பு
ADDED : நவ 15, 2024 01:45 AM

பிரயாக்ராஜ், உத்தர பிரதேச அரசு பணியாளர்கள் தேர்வு ஆணைய தேர்வு விவகாரத்தில், மாநில அரசு அறிவித்துள்ள தீர்வை மாணவர்கள் ஏற்க மறுத்து, கோரிக்கை முழுமையாக ஏற்கப்படும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர்.
எதிர்ப்பு
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இம்மாநில அரசு பணியாளர்கள் தேர்வுக்கான முதல்நிலை தேர்வுகள், டிச., 7 மற்றும் 8ம் தேதிகளிலும், ஆய்வு அதிகாரி மற்றும் உதவி ஆய்வு அதிகாரிக்கான தேர்வு, டிச., 22 மற்றும் 23 தேதிகளில் நடத்தப்படும் என, உ.பி., அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்தது.
இந்த தேர்வுகளை, நாளுக்கு இரண்டு ஷிப்ட் என்ற முறையில் நடத்தவும் திட்டமிடப்பட்டது. இதற்கு தேர்வர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது.
மாநில அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தை முற்றுகையிட்டு அவர்கள் நடத்தும் போராட்டம், நேற்று நான்காவது நாளை எட்டியது. இதையடுத்து, அரசு பணியாளர்களுக்கான தேர்வை ஒரு நாளில் ஒரே ஷிப்ட் முறையில் நடத்த மாநில அரசு ஒப்புக் கொண்டது.
ஷிப்ட் முறை
ஆய்வு அதிகாரி மற்றும் உதவி ஆய்வு அதிகாரிக்கான தேர்வை, ஒரே ஷிப்ட் முறையில் நடத்த முடியுமா என்பதை ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்படும் என அரசு தெரிவித்தது.
இதை மாணவர்கள் ஏற்க மறுத்தனர். போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யவே அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக குற்றஞ்சாட்டிய தேர்வர்கள், அனைத்து தேர்வையும் ஒரே ஷிப்ட் முறையில் நடத்தும் வரை போராட்டம் தொடரும் என, நேற்று அறிவித்தனர்.
பிரயாக்ராஜில் உள்ள மாநில அரசு பணியாளர்கள் தேர்வாணையம் முன், நான்காவது நாளாக போராட்டத்தை நேற்று தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மத்தியில் ஊடுருவிய சில சமூக விரோதிகள், கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.