மாணவர்கள் தற்கொலை துரதிர்ஷ்டவசமானது: வலுவான வழிமுறைகள் வகுக்க கோர்ட் உறுதி
மாணவர்கள் தற்கொலை துரதிர்ஷ்டவசமானது: வலுவான வழிமுறைகள் வகுக்க கோர்ட் உறுதி
ADDED : மார் 01, 2025 12:33 AM

புதுடில்லி: 'நாடு முழுதும் உள்ள ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என, வருத்தம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், 'இதுபோன்ற பிரச்னைகளை கையாள வலுவான வழிமுறைகள் வகுக்கப்படும்' என உறுதி அளித்துள்ளது.
ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், ஐ.ஐ.எம்., எனப்படும், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் உட்பட, முன்னணி பல்கலைகள், நிகர்நிலை பல்கலைகள் மற்றும் தனியார் பல்கலைகளில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது.
தற்கொலை செய்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தார் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், 'கடந்த, 2004 முதல் ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை சேர்ந்த 50 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
வரைவு விதிமுறைகள்
'இதில் பெரும்பாலானோர் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர்கள். ஜாதி ரீதியிலான ஒடுக்குமுறைகளே தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளன' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், மத்திய, மாநில, தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் ஜாதி ரீதியிலான பாகுபாடுகள் இல்லை என்பதை உறுதி செய்ய, வரைவு விதிமுறைகளை வகுக்கும்படி பல்கலை மானியக்குழுவுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதிட்டதாவது:
ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்.,களில் கடந்த 14 மாதங்களில் 18 தற்கொலைகள் நடந்துள்ளன. நீதிமன்ற உத்தரவு இருந்தும், பல்கலைகளும், கல்லுாரிகளும் தங்கள் வளாகங்களில் நடக்கும் தற்கொலைகள் குறித்த முழு விபரங்களை வழங்குவதில்லை.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''மனுதாரர்கள் குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான வரைவு விதிமுறைகளை பல்கலை மானியக்குழு வெளியிட்டுள்ளது. அது இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படும்,'' என்றார்.
வலியுறுத்தல்
இதை கேட்ட நீதிபதிகள், யு.ஜி.சி.,யின் வரைவு விதிமுறைகள் குறித்து தங்கள் பரிந்துரைகளை வழங்கும்படி வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மற்றும் பிற வழக்கறிஞர்களிடம் கேட்டுக் கொண்டனர்.
''வரைவு விதிமுறைகளை இறுதி செய்வதற்கு முன் விசாரணை நடத்த வேண்டும்,'' என, இந்திரா ஜெய்சிங் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த துஷார் மேத்தா, ''இதை அனுமதித்தால், மற்ற மனுதாரர்களும் தனிப்பட்ட விசாரணையை நாடுவர்,'' எனக்கூறினார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இந்த தற்கொலைகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை. இந்த போக்கை முடிவுக்கு கொண்டு வர வலுவான வழிமுறைகள் வகுக்கப்படும். தர்க்க ரீதியான முடிவுக்கு கொண்டு செல்வோம்' என, தெரிவித்தனர்.
வழக்கு விசாரணை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.