ADDED : ஜூலை 17, 2025 01:30 AM

சிக்கமகளூரு: 'மழைக்காலங்களில் பள்ளிக்கு செல்ல சிரமமாக உள்ளதால், சாலை அமைத்து தர வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு 8ம் வகுப்பு மாணவி கடிதம் எழுதி உள்ளார்.
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், மலகர் கிராமத்தை சேர்ந்த சிறுமி சிந்துாரா, 13. இவர், லோக்நாத்பூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
தினமும் பள்ளிக்கு 4 கி.மீ., நடந்து சென்று வருகிறார். இவரது ஊரில் சாலைகள் இல்லாததால், மழைக்காலத்தில் சேறு, சகதியில் சிரமப்பட்டு பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிந்துாரா எழுதியுள்ள கடிதம்:
எங்கள் கிராமத்தில் சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால், மழைக்காலத்தின்போது, சேறு, சகதியுள்ள பாதைகளில் நடக்க முடிவதில்லை. பள்ளி மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சிரமப்படுகிறோம்.
சாலை வசதி இல்லாததால், ஒரு வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே பள்ளிக்கு செல்கிறேன். இதனால், என் ஐ.ஏ.எஸ்., கனவு கலைந்து விடுமோ என்று பயமாக உள்ளது. அரசியல்வாதிகளிடம் பல முறை கூறியும் சாலை அமைத்து தரவில்லை. பிரதமராகிய நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.