பேராசிரியர் பாலியல் சீண்டல் பிரதமருக்கு மாணவியர் கடிதம்
பேராசிரியர் பாலியல் சீண்டல் பிரதமருக்கு மாணவியர் கடிதம்
ADDED : ஜன 09, 2024 03:00 AM
சிர்சா: ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சிர்சா மாவட்டத்தில், சவுத்ரி தேவி லால் பல்கலை உள்ளது.
இந்த பல்கலை பேராசிரியர் ஒருவர் மீது, 500க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவியர் பாலியல் புகார் தெரிவித்து, பிரதமர் மோடி, மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அதன் விபரம்:
இந்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியர், மாணவியரை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து வெளியே தெரிவித்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என, அவர் மிரட்டல் விடுக்கிறார்.
துணைவேந்தரிடம் புகார் அளித்தால், அவரும் இதை கண்டுகொள்ளாமல் எங்களை மிரட்டி வருகிறார்.
அவருக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து, இது குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, பல்கலை பதிவாளர் டாக்டர் ராஜேஷ் குமார் பன்சால் கூறுகையில், ''பேராசிரியர் மீது பாலியல் புகார் குறித்த கடிதம் கிடைக்கப் பெற்றது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடிதத்தை யார் எழுதியது என்பது குறித்த தகவல் இல்லை. எனினும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.