கேரளாவில் முதலாம் ஆண்டு மாணவருக்கு நேர்ந்த கொடூரம்: ஆளுங்கட்சி மாணவ அமைப்பினர் அட்டூழியம்
கேரளாவில் முதலாம் ஆண்டு மாணவருக்கு நேர்ந்த கொடூரம்: ஆளுங்கட்சி மாணவ அமைப்பினர் அட்டூழியம்
ADDED : பிப் 19, 2025 12:12 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் முதலாம் ஆண்டு மாணவரை தாக்கி கொடுமைப்படுத்தியதாக ஆளுங்கட்சி மாணவர் சங்கத்தை(எஸ்எப்ஐ) சேர்ந்தவர் மீது புகார் கூறப்பட்டு உள்ளது. இதனையடுத்து ஏழு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கரியவட்டம் அரசு கல்லூரி உள்ளது. இங்கு கடந்த 11ம் தேதி முதலாம் ஆண்டு மற்றும் சீனியர் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவருக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோபம் அடைந்த எஸ்எப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள், கல்லூரி விடுதிக்குள்நுழைந்து புகார் அளித்த மாணவனை தேடி உள்ளனர். இதில் அந்த மாணவன் கிடைக்கவில்லை
அறையில் இருந்த ஒரு மாணவனை, தங்களது சங்கத்தின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த மாணவனை தாக்கியதுடன் நீண்ட நேரம் முட்டிப்போ வைத்துள்ளனர். அந்த மாணவன் குடிக்க தண்ணீர் கேட்ட போது, பாட்டிலில் தண்ணீர் எடுத்து வந்து அதில் எச்சில் துப்பி குடிக்கச் செய்தனர். இதனை குடிக்க மறுத்ததால் கடுமையாக தாக்கி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை போலீசிலும், ராகிங் எதிர்ப்புக் குழுவிலும் புகார் அளித்தார். இக்குழுவினர்,கல்லூரியில் இருந்த சிசிடிவிக்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக ஏழு மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.