'மாணவர்கள் தொழில் முனைவோராக மாறணும்'; உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து பேச்சு
'மாணவர்கள் தொழில் முனைவோராக மாறணும்'; உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து பேச்சு
ADDED : ஜன 07, 2025 01:56 AM
பாலக்காடு; மாணவர்கள் தொழில் வழங்குபவர்களாக மாற வேண்டும், என, கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து தெரிவித்தார்.
கேரளா மாநில அரசின், 'தொழில் கல்லூரி வளாகத்தில்' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, பாலக்காடு பாலிடெக்னிக் கல்லூரியில் 'ஜென்ரோபோடிக்ஸ்' என்ற நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு துவக்க விழா நடந்தது.
நிகழ்ச்சியில், மலம்புழா எம்.எல்.ஏ., பிரபாகரன் தலைமை வகித்தார். தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் ஷாலிஜ், ஜென்ரோபோடிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரெனின் ராஜேஷ், கேரளா 'ஸ்டார்ட்அப் மிஷன்' திட்ட இயக்குனர் கார்த்திக் பரசுராம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பினுமோள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து பேசியதாவது:
தொழில் முனைவோர்களாக மாணவர்கள் மாற வேண்டும். மாணவர்களின் சிறந்த யோசனைகளை அங்கீகரித்து அதற்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. இத்தகைய யோசனைகளை ஊக்குவிப்பதற்காக 'இளம் கண்டுபிடிப்பாளர்கள்' என்ற திட்டம் வாயிலாக, 5 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரை அரசு உதவி வழங்கி வருகிறது.
தொழில் முனைவோர்களாக மாணவர்கள் மாறும் போது, அது மாநிலத்தின் சிறப்பிற்கும் பொருளாதார செழிப்பிற்கும் உதவியாக விளங்கும். படிக்கும் போதே, தொழில் நோக்குநிலையை வளர்க்கும் திட்டமே, 'தொழில் கல்லூரி வளாகத்தில்' என்பதாகும்.
மாணவர்களிடையே தொழில் ஆர்வத்தை அதிகரிப்பது மற்றும் சிறு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது அரசின் நோக்கமாகும். இத்தகைய திட்டங்கள் வாயிலாக, நிறுவனங்களுக்கு தேவையான திறமையான பணியாளர்களைப் பெறவும், சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற மாணவர்களை தயார்படுத்தவும் உதவும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

