அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள்: இந்தியா முதலிடம்
அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள்: இந்தியா முதலிடம்
ADDED : நவ 19, 2024 04:22 PM

புதுடில்லி: நடப்பு கல்வியாண்டில்,அமெரிக்காவிற்கு அதிக மாணவர்களை அனுப்புவதில், சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடத்திற்கு வந்துவிட்டது. என சர்வதேச கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவிற்கு படிக்க செல்லும் சர்வதேச மாணவர்களில் முதலிடம் வகித்த சீனாவை, 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்தியா முதலிடத்திற்கு வந்துள்ளது.கடைசியாக 2009ஆம் ஆண்டு இந்தியா முதலிடம் பிடித்திருந்தது.
அமெரிக்கக் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா, 23 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. சீனா 4 சதவீத சரிவைக் கண்டது.
3.3 லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கல்வி நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆலன் குட்மேன் கூறுகையில்,
சர்வதேச மாணவர்களில்,இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் பாதியை அமெரிக்காவிற்கு அனுப்புகின்றன.
இந்த மாணவர்கள் கணினி அறிவியல், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய படிப்புகளைப் படிக்கின்றனர்.
சர்வதேச மாணவர்கள் எங்கள் வளாகங்களை வளப்படுத்துகிறார்கள், கலாச்சார பரிமாற்றத்தை வளர்க்கிறார்கள் மற்றும் நமது பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்கள்.அமெரிக்காவில், சர்வதேச மாணவர்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது பட்டதாரி திட்டங்களில் 19 சதவீத அதிகரிப்புடன் காணப்படுகிறது.
பல நடைமுறை பயிற்சி வகுப்புகள் கூட 41 சதவீதம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக தொற்றுநோய்க்குப் பிறகு மாணவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்திய மாணவர்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 50 பில்லியன் டாலர்கள் பங்களிப்பு அளிக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் 7 சதவீத அதிகரிப்புடன், அமெரிக்கப் பொருளாதாரத்திலும் அவர்கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இவ்வாறு ஆலன் குட்மேன் கூறினார்.