மாணவி தீக்குளித்து பலியான வழக்கு: தற்கொலைக்கு துாண்டியதாக இருவர் கைது
மாணவி தீக்குளித்து பலியான வழக்கு: தற்கொலைக்கு துாண்டியதாக இருவர் கைது
ADDED : ஆக 05, 2025 12:03 AM
பாலசோர்: ஒடிஷாவில், கல்லுாரி மாணவி தீக்குளித்து பலியான சம்பவத்தில், அவரை தற்கொலைக்கு துாண்டியதாக ஏ.பி.வி.பி., மாணவர் தலைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஒடிஷாவின் பாலசோரில் உள்ள தன்னாட்சி கல்லுாரியில் பி.எட்., படித்து வந்த மாணவி ஜூலை 12ல் தீக்குளித்து தற்கொலை செய்தார்.
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் மீது அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததை அடுத்து, கல்லுாரி வளாகத்திலேயே அவர் தீக்குளித்து இறந்தார்.
அவரை காப்பாற்ற சென்ற கல்லுாரி மாணவர் ஜோதி பிரகாஷ் பிஸ்வாலுக்கு தீக்காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிஸ்வால் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முன்னதாக மாணவி தீக்குளிக்க இருப்பதை முன்பே அறிந்த பிஸ்வால், தீக்குளிக்கும் காட்சியை தன், 'மொபைல் போன்' வாயிலாக படம்பிடித்து சமூகவலைதளத்தில் பரப்பியுள்ளார்.
இந்நிலையில் மாணவி தற்கொலை தொடர்பாக கல்லுாரி முதல்வர் திலீப் கோஷ் மற்றும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சமிரா குமார் சாஹூ ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மாணவியை தற்கொலைக்கு துாண்டியதாக மாணவர் அமைப்பின் தலைவர்கள் சுப்ரா சம்பைத் நாயக் மற்றும் மாணவியை காப்பாற்றியது போல் நடித்த ஜோதி பிரகாஷ் பிஸ்வால் ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதனால் கைது எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இதில் நாயக் மற்றும் பிஸ்வால் இருவரும் ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.,யின் உறுப்பினர் என பிஜு ஜனதா தளம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதையடுத்து நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.