நிலச்சரிவு பாதிப்பால் ஹெலிகாப்டரில் சென்று தேர்வு எழுதிய மாணவர்கள்
நிலச்சரிவு பாதிப்பால் ஹெலிகாப்டரில் சென்று தேர்வு எழுதிய மாணவர்கள்
ADDED : செப் 07, 2025 02:56 AM

பிதோரகார் : உத்தராகண்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலைகள் மூடப்பட்டதை அடுத்து ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள முன்சியாரிக்கு ஹெலிகாப்டரில் சென்று தேர்வு எழுதினர்.
ராஜஸ்தானின் பலோட்ரா பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் ஓமாராம் ஜாட், மங்காராம் ஜாட், பிரகாஷ் கோத்ரா ஜாட், நர்பத் குமார் ஆகியோர் உத்தராகண்ட் திறந்தவெளி பல்கலையில் பி.எட்., படிக்கின்றனர்.
இவர்களுக்கான தேர்வு கடந்த மாதம் 31ல் நடந்தது. உத்தராகண்டின் முன்சியாரியில் உள்ள ஆர்.எஸ். டோலியா பி.ஜி., கல்லுாரியை தேர்வு மையமாக தேர்வு செய்திருந்தனர். தேர்வு அன்று, ஹல்ட்வானி சென்றடைந்த மாணவர்கள் நான்கு பேரும் அதிர்ச்சியடைந்தனர்.
சமீபத்தில் பெய்த கனமழையால் உத்தராகண் டின் முன்சியாரி செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் தேர்வு மையத்தை அடைய முடியாத நிலை ஏற்பட்டதால், மாணவர்கள் தவித்தனர்.
உடனே மாணவர் ஓமாராமுக்கு ஒரு ஐடியா தோன்றியது. தேர்வு எழுதாவிட்டால், ஓராண்டு வீணாகிவிடுமே என நினைத்தார். இதனால், ஹல்ட்வானியில் ஒரு தனியார் நிறுவனம் ஹெலிகாப்டர் சேவை அளிப்பதை அறிந்து அதை தொடர்பு கொண்டார். ஆனால், மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக ஹெலிகாப்டர் சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்தது.
இதையடுத்து, 'ஹெரிடேஜ் ஏவியேஷன்' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியுடன் போனில் பேசியபோது அவர் உதவி செய்வதாக உறுதியளித்தார். இதற்காக, ஓமாராமுடன் மற்ற மூன்று மாணவர்களையும் ஏற்றிக்கொண்டு முன்சியாரிக்கு ஹெலிகாப்டர் பறந்தது.
தேர்வு எழுதி முடித்ததும், அதே ஹெலிகாப்டரில் ஹல்ட்வானிக்கு அழைத்து வரப்பட்டனர். இதற்காக அவர்களிடம், 10,400 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.