ADDED : மார் 08, 2024 02:06 AM

சிக்கபல்லாப்பூர்: ''பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தால், முன்னாள் அமைச்சர் சுதாகர் சிறைக்கு செல்வார்,'' என, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ரெட்டி கூறி உள்ளார்.
சிக்கபல்லாப்பூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., முன்னாள் அமைச்சர் சுதாகர், சாதாரண நபராக இருந்தார். அவரை அடையாளம் கண்டு, காங்கிரஸ் இரண்டு முறை 'சீட்' கொடுத்தது. கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு, பா.ஜ.,வுக்கு ஓடினார். சுகாதாரத் துறை அமைச்சராக இருந்து, தற்போது பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர் ஆகி உள்ளார்.
லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாப்பூர் தொகுதியில் பா.ஜ., சீட் கிடைக்கா விட்டால், காங்கிரசுக்கு வந்து விடுவார் என்று பேச்சு அடிபடுகிறது. பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தால், வருமான வரி, அமலாக்கத் துறை சோதனைக்கு உள்ளாகி, ஒரே மாதத்தில் சிறைக்கு சென்று விடுவார்.
காங்கிரசுக்கு சுதாகர் தேவை இல்லை. அவரை கட்சியில் மறுபடியும் சேர்க்கவே கூடாது; சேர்த்தால் கடுமையாக எதிர்ப்போம். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த, எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களை தட்டி எழுப்பவே, சில அறிக்கைகள் வெளியிட்டேன்.
அதன்பின்னர் என்னை அழைத்து பேசினர். சிக்கபல்லாப்பூர் காங்கிரஸ் சீட்டுக்கு என் பெயரையும் மேலிடத்திற்கு அனுப்பி வைத்து உள்ளனர். சீட் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. கட்சியில் தொடர்ந்து நீடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

