பெங்களூரில் நிலத்தடி நீர்மட்டம் குறைவு குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் திடீர் மூடல்
பெங்களூரில் நிலத்தடி நீர்மட்டம் குறைவு குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் திடீர் மூடல்
ADDED : பிப் 17, 2024 05:25 AM
பெங்களூரு : கர்நாடகாவில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில், தென்மேற்கு பருவமழை பெய்யும். அப்போது அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பும். கடந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை பொய்த்தது.
போதிய மழை பெய்யாததால், நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால், மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனை சமாளிக்க டேங்கர்கள் மூலம், தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தின் தலைநகரான பெங்களூரிலும், குடிநீர் பிரச்னை தலைதுாக்க ஆரம்பித்து உள்ளது.
நகரின் குடிநீர் தேவையை தீர்த்து வைப்பதில், காவிரி ஆற்றின் தண்ணீர், முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் காவிரிக்கு தண்ணீர் திறக்கும், கே.ஆர்.எஸ்., அணையிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
பெங்களூருக்கு ஒரு நாளைக்கு, 1,850 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 1,680 மில்லியன் லிட்டர், தண்ணீர் மட்டும் கிடைக்கிறது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. நகரில் உள்ள 10,995 ஆழ்துளை கிணறுகளில் 1,240 ஆழ்துளை கிணறுகள், வறண்டு போகும் நிலையில் உள்ளது.
நிலத்தடி நீர்மட்டத்தை நம்பி, நகரில் பல இடங்களில், மாநகராட்சி சார்பில், குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் திறக்கப்பட்டன. இந்த மையங்களில் ஐந்து ரூபாய் செலுத்தி 20 லிட்டர் தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம்.
ஆனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவால், நகரில் பல குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் மூடப்பட்டு உள்ளது.
நகரின் பல இடங்களில் பணம் கொடுத்து, மக்கள் டேங்கர் குடிநீர் வாங்குகின்றனர். இதனால் டேங்கர் உரிமையாளர்கள் விலையை உயர்த்தி வருகின்றனர். குடிநீர் பிரச்னையை சரிசெய்ய, பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியமும், பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.