ADDED : அக் 23, 2024 06:45 AM
விஜயபுரா : விஜயபுரா மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நேற்று திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. வீடுகளின் பாத்திரங்கள் உருண்டதால், மக்கள் பீதி அடைந்தனர்.
கர்நாடகா - மஹாராஷ்டிரா மாநில எல்லையில் உள்ளது விஜயபுரா மாவட்டம். இங்கு உள்ள தி.கோட்டா தாலுகாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். நேற்று காலை 11:29 மணிக்கு தி.கோட்டாவின் தக்கலக்கி, சோமதேவரஹட்டி, மலகானதேவரஹட்டி, காககவடகி, கோனாசாகி, ஹுபானுார் ஆகிய கிராமங்களில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரண்டு நிமிடங்கள் நீடித்த நிலநடுக்கத்தால், வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்து உருண்டோடின. பீதி அடைந்த மக்கள், வீடுகளுக்குள் இருந்து வெளியே ஓடி வந்தனர். கிராமங்களுக்குச் சென்று மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
ரிக்டேர் அளவில் 1.96 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக கூறினர். எந்த பாதிப்பும் இல்லை. பீதி அடைய வேண்டாம் என, கிராம மக்களிடம் கூறினர்.

