முன்பகையால் நடந்த துப்பாக்கிச்சூடு போலீஸ் விசாரணையில் 'திடுக்' தகவல்
முன்பகையால் நடந்த துப்பாக்கிச்சூடு போலீஸ் விசாரணையில் 'திடுக்' தகவல்
ADDED : பிப் 10, 2024 12:59 AM

மும்பை, மஹாராஷ்டிராவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. பாதுகாவலரின் துப்பாக்கியை பயன்படுத்தி, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த அபிஷேக் கோசல்கரை, மொரிஸ் நோரோன்ஹா சுட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்தது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக நோரோன்ஹாவின் பாதுகாவலரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - பா.ஜ., - அஜித் பவாரின் தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மும்பையில் உள்ள தாஹிசர் என்ற பகுதியில், உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., வினோத் கோசல்கரின் மகன் அபிஷேக் கோசல்கரும், 40, அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த மொரிஸ் நோரோன்ஹா என்பவரும், நேற்று முன்தினம் சமூக வலைதளமான பேஸ்புக்கில் நேரலையில் பேசினர்.
அப்போது கோசல்கரை, நோரோன்ஹா துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின் அதே துப்பாக்கியால் தானும் தற்கொலை செய்தார். இச்சம்பவம், மஹாராஷ்டிர அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக, காங்., - உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தன் பாதுகாவலர் அமரேந்திர மிஸ்ராவின் துப்பாக்கியை பயன்படுத்தி, கோசல்கரை நோரோன்ஹா சுட்டுக் கொன்றதும், பின் தற்கொலை செய்து கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, அமரேந்திர மிஸ்ராவை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், நோரோன்ஹாவின் மனைவி உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
இது குறித்து, மும்பை போலீசார் நேற்று கூறியதாவது:
மொரிஸ் நோரோன்ஹா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு, ஐந்து மாத சிறைவாசத்துக்கு பின், சமீபத்தில் வெளியே வந்துள்ளார். அபிஷேக் கோசல்கர் உடன், ஏற்கனவே பகை உள்ள நிலையில், பலாத்கார வழக்கில் தான் சிக்கியதற்கு, கோசல்கர் தான் காரணம் என, நோரோன்ஹா கருதினார்.
சிறையிலிருந்து வெளியே வந்ததில் இருந்து, கோசல்கரை விட்டுவிட மாட்டேன் என, தன் மனைவியிடம், நோரோன்ஹா அடிக்கடி கூறி வந்துள்ளார். கோசல்கரின் நம்பிக்கையை பெறுவதற்காக, அவரை பாராட்டி பல இடங்களில் நோரோன்ஹா பேனர் வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, 7:30 மணி அளவில், பெண்களுக்கு சேலை வினியோகம் செய்ய, தன் அலுவலகத்துக்கு வரும்படி கோசல்கருக்கு நோரோன்ஹா அழைப்பு விடுத்தார். பின், பேஸ்புக் நேரலை செய்யலாம் என, அவர் பரிந்துரைத்தார். அதில் இருவருமே தங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்தனர்.
அப்போது திடீரென, தன் பாதுகாவலர் அமரேந்திர மிஸ்ராவின் துப்பாக்கியை பயன்படுத்தி அபிஷேக் கோசல்கரை நோரோன்ஹா சுட்டுக் கொன்றார். பின் அதே துப்பாக்கியால் தானும் சுட்டு தற்கொலை செய்தார். இது தொடர்பாக அமரேந்திர மிஸ்ராவிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.