ADDED : மே 08, 2026 01:20 AM
குருகிராம்:குருகிராமில் இருந்து சோஹ்னா செல்லும் உயர் மட்ட சாலை பாலத்தில், ஷபாஷ் சவுக் என்ற இடத்தில், சாலையில் நேற்று பெரிய அளவில், 8 மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், அதில் விழுந்து விடாமல் இருக்க, அந்த சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
ஹரியானா மாநிலத்தில், 2014ல் பொதுப்பணித்துறை அமைச்சராக ராவ் நர்பீர் சிங் இருந்தபோது, குருகிராம் - சோனா வழித்தடத்தில், முறையான ஆய்வுகள் செய்யப்படாததால், பல இடங்களில் சாலையில் பள்ளம் ஏற்பட்டது என கூறப்படுகிறது.
கடந்த, 2020ல், இந்த சாலை வழித்தடத்தில் உள்ள மேம்பாலத்தில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் திடீரென வெடித்ததில், சாலையில் பள்ளம் ஏற்பட்டு, தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதையடுத்து, மீண்டும், 8 மீட்டர் ஆழம், 2 மீட்டர் அகலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இப்போது, அதே வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள, 8 மீட்டர் ஆழ சாலை பள்ளத்தில் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விழுந்து விடாமல் இருக்க, சுபாஷ் சவுக் அருகே சாலை தடுப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில், மண் மற்றும் கான்கிரீட்டை கொட்டி சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
