ADDED : டிச 09, 2024 03:09 AM
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில், சக போலீஸ்காரரை சுட்டுக்கொன்ற ஏட்டு, பின் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் சோபூரில் இருந்து நேற்று காலை ஒரு ஏட்டு உட்பட மூன்று போலீசார், ரியாஷி மாவட்டத்தில் உள்ள தல்வாரா துணை பயிற்சி மையத்துக்கு வேனில் சென்றனர்.
வேன் உதம்பூர் அருகேயுள்ள ரெஹம்பால் பகுதியில் உள்ள காளி மாதா கோவில் அருகே சென்றது. அப்போது வேனை ஓட்டிச் சென்ற போலீஸ்காரருக்கும், ஏட்டுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஏட்டு, தான் வைத்திருந்த துப்பாக்கியால் அருகில் இருந்த சக போலீஸ்காரர் இருவரையும் சுட்டார்.
பின் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதில், போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொரு போலீஸ்காரர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார், வேனில் குண்டு துளைத்தபடி சடலமாக கிடந்த இரு போலீசாரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.