தற்கொலை இன்ஜினியரின் மகன் ஹரியானாவில் படிப்பதாக தகவல்
தற்கொலை இன்ஜினியரின் மகன் ஹரியானாவில் படிப்பதாக தகவல்
ADDED : ஜன 10, 2025 07:17 AM
பெங்களூரு: தற்கொலை செய்த இன்ஜினியர் அதுல் சுபாஷின் 4 வயது மகன், ஹரியானாவில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருவது தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அதுல் சுபாஷ், 34. பெங்களூரு மாரத்தஹள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றினார்.
கடந்த மாதம் 9ம் தேதி, தான் வசித்து வந்த வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக, மனைவி நிகிதா, மாமியார் நிஷா, மைத்துனர் அனுராக் ஆகியோர் தொல்லையால் தற்கொலை செய்வதாக வீடியோவில் பேசியிருந்தார்.
இந்த வீடியோவின் அடிப்படையில் மாரத்தஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, நிகிதா, நிஷா, அனுராக்கை கைது செய்தனர். மூன்று பேருக்கும் பெங்களூரு விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இதற்கிடையில், அதுல் - நிகிதாவுக்கு பிறந்த 4 வயது மகனை பற்றிய தகவல் இல்லாமல் போனது. பேரனை கண்டுபிடித்து தரும்படி உச்ச நீதிமன்றத்தில் அதுல் சுபாஷி தாய், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம், மாரத்தஹள்ளி போலீசாருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது.
அந்த கடிதத்தில், 'அதுல் சுபாஷ் மகன் எங்கள் பள்ளியில் தான் படிக்கிறார். அவரது தாய் நிகிதா தான் பள்ளி சேர்க்கை செயல்முறையை முடித்தார்.
தற்போது, பள்ளிக்கு குளிர்கால விடுமுறை விடப்பட்டுள்ளது. குழந்தையை அழைத்துச் செல்ல யாரும் வராததால், பள்ளியின் விடுதியில் தங்க வைத்துள்ளோம்' என்று கூறப்பட்டு உள்ளது.

