ADDED : ஏப் 13, 2025 05:34 AM

அமிர்தசரஸ்: பஞ்சாபில் சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் தலைவராக சுக்பீர் சிங் பாதல் நேற்று மீண்டும் தேர்வானார்.
பஞ்சாபில் கடந்த 2007 - -2017 வரை சிரோன்மணி அகாலிதளம் ஆட்சியில் இருந்தது. முதல்வராக பிரகாஷ் சிங் பாதலும், துணை முதல்வராக அவரது மகன் சுக்பீர் சிங் பாதலும் இருந்தனர். அந்த ஆட்சியின்போது, மத நிந்தனைகள் நடந்ததாகக் கூறி, சீக்கிய மத அமைப்பு சார்பாக கடந்தாண்டு டிச., 2-ல், சுக்பீருக்கு மத ரீதியான தண்டனை வழங்கப்பட்டது.
இதனால், 2008 முதல் கட்சித் தலைவராக இருந்த சுக்பீர், பதவியை ராஜினாமா செய்ததோடு, அமிர்தசரசில் உள்ள பொற்கோவில், பாத்திரம் சுத்தம் செய்வது, சமையல் செய்வது போன்ற சேவைகளை செய்தார். அப்போது காலிஸ்தான் பயங்கரவாதிகளின் கொலை முயற்சியில் இருந்து தப்பினார். இந்த நிலையில், அமிர்தசரசில் நேற்று நடந்த சிரோன்மணி அகாலிதளம் பொதுக்குழு கூட்டத்தில், மீண்டும் கட்சியின் தலைவராக சுக்பீர் சிங் தேர்வானார்.
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இருந்த சிரோன்மணி அகாலிதளம், 2017-ல் பஞ்சாபில் ஆட்சியை பறிகொடுத்த பின், தொடர் தோல்வியை சந்திக்கிறது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, இக்கட்சியின் மத்திய அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்ததோடு, பா.ஜ., கூட்டணியையும் 2021-ல் முறித்தது. தற்போது, பஞ்சாபில் 3 எம்.எல்.ஏ., லோக்சபாவில் ஒரு எம்.பி., மட்டுமே இக்கட்சிக்கு உள்ளனர்.

