ADDED : ஏப் 15, 2026 05:27 AM
பாலக்காடு: கேரள மாநிலத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக, பாலக்காடு மாவட்டம் பெரும் வெப்பத்தை எதிர்கொண்டுள்ளது. ஆங்காங்கே லேசான மழையும் காற்று வீசினாலும், வெப்பநிலை குறையவில்லை. இன்னும் இரு வாரங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து, ஒருங்கிணைந்த கிராமப்புற தொழில்நுட்ப மைய அதிகாரி ஸ்ரீஜித் கூறியதாவது:
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணக்கின்படி, கடந்த 10ம் தேதி மாவட்டத்தின் சராசரி வெப்பநிலை, 40.2 டிகிரி செல்சியஸ் பதிவானது. 11ம் தேதி மலம்புழா கண்காணிப்பு மையத்தில் 40.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு கிடைக்க வேண்டிய கோடை மழையில் இதுவரை 54.1 சதவீதம் பெய்யவில்லை.
இவ்வாறு, கூறினார்.
இது குறித்து, பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வானிலை நிபுணர் ராஜீவன் எரிக்குளம் கூறியதாவது:
கடந்த, 2025ம் ஆண்டை விட இந்த முறை வெயில் மிகக் கடுமையாக உள்ளது. காலை, 9:00 மணிக்கே வெப்பநிலை, 31 டிகிரி செல்சியஸ் தொட்டுவிடுகிறது.
இந்த பகல் நேர வெப்பம் மேலும் சில நாட்களுக்கு தொடரவே வாய்ப்பு அதிகம். பூமியிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு வெப்பத்தையும் சேர்த்து, மனித உடல் உணரக்கூடிய வெப்பத்தின் அளவு சராசரியாக, 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.
இவ்வாறு, கூறினார்.
பாலக்காடு மட்டுமின்றி புனலூர், கோட்டயம், காசர்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களிலும் இயல்பை விட அதிக வெப்பம் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
