‘பார்சல் டெலிவரி’ செயலி மூலம் போதை பொருட்கள் சப்ளை
‘பார்சல் டெலிவரி’ செயலி மூலம் போதை பொருட்கள் சப்ளை
UPDATED : நவ 24, 2026 08:53 PM
ADDED : நவ 24, 2026 08:46 PM

சண்டிகர்: பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், டெலிவரி செயலிகளின் முகவர்களைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை வாடிக்கையாளர்களிடம் விற்று வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஞ்சாபில் போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களிடையே அதிக அளவு உள்ளது. போதைப்பொருள் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 18 மாதங்களில் மட்டும் 4,803 கிலோ ஹெராயின், 67.34 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கடத்தல் தொடர்பாக 72 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 95 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், போதைப்பொருள் விற்பனை கும்பல் புதிய வழிமுறையை கையாள்வதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
‘வாட்ஸாப்’ தகவல் பரிமாற்ற செயலி மூலம் போதைப்பொருள் கும்பலை தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு, டெலிவரி செயலி முகவர்கள் வாயிலாக போதைப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பார்சலை டெலிவரி செய்ய வரும் முகவரிடம் போதைப்பொருள் என்பதை மறைத்து வேறு ஏதேனும் பார்சல் என கூறி அனுப்பி வைப்பது தெரியவந்துள்ளது.
இது வழக்கமான பொருள் டெலிவரி போலவே தெரிவதால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுவதில்லை. மேலும், பஞ்சாபில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிக்க பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு உள்ளது.
செயற்கைக்கோள் தகவல் தொடர்பு வசதி கொண்ட, ‘ட்ரோன்’கள் எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானங்களில் வைத்து போதைப்பொருட்களை பஞ்சாப் எல்லைக்குள் துல்லியமான இடங்களில் வீசுகின்றனர்.
அதன் பின் மீண்டும் அந்த ட்ரோன்கள் பாகிஸ்தானுக்கு திரும்புகின்றன. ஒரு ட்ரோனில் 5 முதல் 20 கிலோ வரை போதைப்பொருட்களை கடத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
