சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரியுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு தொலைபேசியில் ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரியுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு தொலைபேசியில் ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
ADDED : ஆக 18, 2025 02:10 PM

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் தேஜ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என முதல்வர் ஸடாலின் இடம் தொலைபேசியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க செப்., 9ல் தேர்தல் நடக்கும் என்றும், ஓட்டுப்பதிவு முடிந்ததும், அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு பின், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி துவங்கிய நிலையில், வரும் 21 வரை மனு தாக்கல் செய்யலாம்.
வேட்புமனு தாக்கல் முடிவடைய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், டில்லியில் உள்ள பா.ஜ., தலைமையகத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அக்கட்சியின் பார்லிமென்ட் குழு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிவில் துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மஹாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன், 68, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தற்போது சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு திரட்டும் பணி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் அந்த பணியை தொடங்கி உள்ளார். அந்தவகையில் முதல்வர் ஸ்டாலினை ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் தேஜ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ராஜ்நாத் சிங் முன்வைத்தார் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பல மாநில முதல்வர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராஜ்நாத் சிங் ஆதரவு கோரி வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.