அதிகாரியை அறைந்த வேட்பாளர் கைது வாகனங்களுக்கு தீ வைத்த ஆதரவாளர்கள் *ராஜஸ்தான் கலவரம்
அதிகாரியை அறைந்த வேட்பாளர் கைது வாகனங்களுக்கு தீ வைத்த ஆதரவாளர்கள் *ராஜஸ்தான் கலவரம்
ADDED : நவ 15, 2024 01:48 AM

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த துணை கலெக்டரின் கன்னத்தில் அறைந்த சுயேச்சை வேட்பாளர் நரேஷ் மீனா நேற்று கைது செய்யப்பட்டார். அதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போலீசார் மீது கற்களை வீசியதுடன், வாகனங்களை தீயிட்டு எரித்ததால் அப்பகுதியில் கலவரம் வெடித்தது.
சுயேச்சை
ராஜஸ்தானில், முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடந்தது.
தியோலி - யுனியாரா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நரேஷ் மீனா சுயேச்சையாக போட்டியிட்டார்.
டோங்க் மாவட்டத்தின் தியோலி - யுனியாரா தொகுதியில் உள்ள சம்ரவ்தா என்ற கிராமம் தியோலி பகுதிக்குட்பட்டு உள்ளது. இதை யுனியாரா பகுதிக்கு மாற்ற வலியுறுத்தி அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இவர்களுக்கு நரேஷ் மீனா ஆதரவு தெரிவித்து வந்தார். தேர்தல் நாளன்று பணியில் ஈடுபட்டு இருந்த துணை கலெக்டர் அமித் சவுத்ரி, சம்ரவ்தா கிராம மக்களை ஓட்டளிக்க வரும்படி பேச்சு நடத்தினார். இதில் சிலர் சமரசம் அடைந்து ஓட்டளிக்க வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சுயேச்சை வேட்பாளர் நரேஷ், ஓட்டுச்சாவடி முன் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, துணை கலெக்டர் அமித் சவுத்ரியின் சட்டையை பிடித்து இழுந்த நரேஷ், அவரது கன்னத்தில் அறைந்தார்.
இந்நிலையில், சம்ரவ்தா கிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடி முன், நரேஷ் மீனா மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று காலை தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
கண்ணீர் புகை குண்டு
நிலைமை கட்டுப்பாட்டை மீறி சென்றது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ் வாகனம் உட்பட, 60 இருசக்கர வாகனங்கள் மற்றும் 18 கார்கள், நரேஷ் ஆதரவாளர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டன.
இது தொடர்பாக 60 பேரை போலீசார் கைது செய்தனர். சம்ரவ்தா கிராமத்திற்குள் சென்று நரேஷ் மீனா பதுங்கினார்.
அவரை கைது செய்ய போலீசார் முயன்ற போது அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டு அவர்கள் கலைக்கப்பட்டனர். இறுதியில் நரேஷ் மீனா கைது செய்யப்பட்டார்.
சம்ரவ்தா கிராமத்துக்கு செய்தி சேகரிக்க சென்ற பி.டி.ஐ., செய்தி நிறுவன நிருபர் அஜீத் ஷெகாவத், புகைப்பட ஒளிப்பதிவாளர் தர்மேந்திர குமார் மீது, நரேஷ் மீனா ஆதரவாளர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். தர்மேந்திர குமாரின் கேமராவை பறித்து தீயிட்டு எரித்தினர்.