ADDED : ஜன 26, 2025 11:06 PM

பெங்களூரு: கணவருக்கு மன மற்றும் உடல் ரீதியில் இம்சை கொடுத்ததாக, துணை நடிகை சசிகலா மீது, வழக்கு பதிவாகியுள்ளது.
கன்னட திரைப்பட இயக்குநர் ஹர்ஷவர்தன், 2020ல், 'பிரஜாராஜ்யா' என்ற படத்தை இயக்கினார். படம் நன்றாக ஓடியது. அதன்பின் சில படங்களை இயக்கினார். இவருக்கு 2021ல் துணை நடிகையான சசிகலா என்ற சுசிலம்மா அறிமுகமானார்.
தன்னுடன் சேர்ந்து வாழ்ந்தால், புதிய படத்துக்கு முதலீடு செய்வதாக, ஹர்ஷவர்தனுக்கு சசிகலா ஆசை காண்பித்துள்ளார். இதற்கு, ஹர்ஷ வர்தனும் சம்மதித்தார். ஆனால் சில நாட்களுக்கு பின், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, ஹர்ஷ வர்தனுக்கு சசிகலா நெருக்கடி கொடுக்க துவங்கினார். இதற்கு ஹர்ஷவர்தன் மறுத்ததால், இருவரும் நெருக்கமாக பேசியதை, மொபைல் போனில் பதிவு செய்து சசிகலா மிரட்டினார்.
இதற்கும் ஹர்ஷவர்தன் பணிய மறுக்கவே, அடியாட்களை வைத்து ஹர்ஷவர்தனை சசிகலா தாக்கினார். இது தொடர்பாக, அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில், ஹர்ஷ வர்தன் புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என, கூறப்படுகிறது.
அதே நேரம், 2022ல் சசிகலா புகார் அளித்து, ஹர்ஷ வர்தனை கைது செய்ய வைத்தார். அவர் சிறையில் இருந்து திரும்பிய பின், வேறுவழியின்றி சசிகலாவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின், தயாரிப்பாளர்கள் உட்பட பலர் அவ்வப்போது சசிகலாவை தேடி வீட்டுக்கு வந்தனர். சில தயாரிப்பாளர்கள் வீட்டுக்கு வரும் போது, கணவரை வெளியே அனுப்பியுள்ளார். இது குறித்து கேள்வி எழுப்பிய ஹர்ஷவர்தனை, சசிகலா மீண்டும் சிறைக்கு அனுப்புவதாக மிரட்டியுள்ளார்.
கடந்த 2024 ஆகஸ்டில், சண்டை அதிகமாகி ஹர்ஷவர்தனை, சசிகலா வீட்டில் இருந்து விரட்டினார். அதன்பிறகும், 'உன்னை நிம்மதியாக வாழவிட மாட்டேன்' எனவும், 'பிளாக்மெயில்' செய்துள்ளார்.
நடந்த சம்பவங்களை விவரித்து, வித்யாரண்யபுரா போலீஸ் நிலையத்தில் ஹர்ஷ வர்தன் புகார் அளித்துள்ளார். போலீசாரும், சசிகலா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

