வக்ப் திருத்த சட்டத்தை செயல்படுத்துவது நிறுத்தி வைப்பு! மத்திய அரசு உறுதிமொழியை ஏற்றது சுப்ரீம் கோர்ட்
வக்ப் திருத்த சட்டத்தை செயல்படுத்துவது நிறுத்தி வைப்பு! மத்திய அரசு உறுதிமொழியை ஏற்றது சுப்ரீம் கோர்ட்
ADDED : ஏப் 18, 2025 04:35 AM

வக்ப் திருத்தச் சட்ட வழக்கில், மத்திய அரசு தரப்பு அளித்த உறுதிமொழியை ஏற்று, முக்கிய பிரிவுகளை செயல்படுத்துவதை இடைக்காலமாக நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
முஸ்லிம்கள் தானமாக அளிக்கும் சொத்துக்களை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட வக்ப் வாரியம் தொடர்பான சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை செய்தது. இந்த திருத்த சட்டத்துக்கு எதிராக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உட்பட பல முஸ்லிம் அமைப்புகள், தனிநபர்கள் என நுாற்றுக்கணக்கான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை அனைத்தும் ஒன்றாக சேர்த்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அரிதான உத்தரவு
நேற்று முன்தினம் நடந்த முதல் நாள் விசாரணையில், 'ஹிந்து அறக்கட்டளைகளில் முஸ்லிம்களை அனுமதிப்பீர்களா?' என, பல கேள்விகளை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது. இந்நிலையில் இரண்டாம் நாளாக நேற்று மதியம் 2:00 மணிக்கு இந்த வழக்கின் விசாரணை துவங்கியது. மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தன் வாதத்தை துவக்கினார்.
அவர் வாதிட்டதாவது: இந்த வக்ப் சட்டத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ நீங்கள் தடை செய்தால், அது மிகவும் அரிதான உத்தரவாகவே இருக்கும்.ஆனால் அதற்கு முன்பாக இந்த சட்டத்தின் நோக்கம் என்ன, அது எதற்காக கொண்டு வரப்பட்டது, என்ன மாதிரியான விவாதங்கள் நடந்தன, கடந்த கால வரலாறு உள்ளிட்டவற்றை நீதிமன்றம் கணக்கில் கொள்ள வேண்டும்.
காரணம், கிராமம் கிராமமாக பல்வேறு சொத்துக்கள் வக்ப் சொத்துக்களாக மாற்றப்படுகின்றன. இதனால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் இடத்திலிருந்து இந்த விஷயத்தை அணுக வேண்டி இருக்கிறது. மேலும், இது பார்லிமென்டால் நிறைவேற்றிக் கொண்டு வரப்பட்ட சட்டம் என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த திருத்தச் சட்டத்தின் சில ஷரத்துகளை பார்த்து நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க கூடாது.
வக்ப் சட்டம் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மிகவும் கடுமையான அணுகுமுறையை மேற்கொண்டு இருக்கிறது. வழக்கு தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க எங்களுக்கு ஒரு வார காலமாவது அவகாசம் கொடுங்கள். இந்த ஒரு வார காலத்திற்குள் எதுவும் மாறிவிடப் போவதில்லை. இவ்வாறு அவர் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட, தலைமை நீதிபதி, 'அப்படியானால், 1995 சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வக்ப் சொத்துக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது; புதிய சட்டத்தின் படி வக்ப் குழுக்களை அமைக்கக் கூடாது' என்ற நிபந்தனைகளை முன் வைத்தார். அதனை ஏற்றுக் கொள்வதாக, துஷார் மேத்தா உறுதியளித்தார்.
இதையடுத்து அமர்வு பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரத்தில் உடனடியாக, இடைக்கால உத்தரவோ, இறுதி உத்தரவோ, எதையும் பிறப்பிக்கப் போவதில்லை. அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக எதிர் தரப்பினர் பாதிக்கப்படாத வகையில், இடைக்கால நிவாரணமும் வழங்க வேண்டியது அவசியமாகிறது.
ஐந்து மனுக்கள்
எனவே புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள வக்ப் திருத்த சட்டத்தின் படி எந்த உறுப்பினர் நியமனமும் நடைபெறக் கூடாது. ஏற்கனவே வக்ப் என பதிவு செய்யப்பட்ட சொத்துக்களின் மீது புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. புதிய சட்டத்தின் படி வக்ப் நில வகைப்படுத்தலும் இருக்கக் கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக நுாற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அனைத்தையும் விசாரிப்பது என்பது நடைமுறை சாத்தியம் கிடையாது.
எனவே, ஏதேனும் ஐந்து மனுக்களை மட்டுமே நாங்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப் போகிறோம். மற்ற மனுக்களை இடைக்கால நிவாரணம் கேட்ட மனுக்களாகக் கருதி முடித்து வைக்கப்படும். எந்த ஐந்து மனுக்கள் என்பதை மனுதாரர்களே முடிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது. மத்திய அரசு பதிலளிக்க ஒரு வார காலம் அவகாசம் வழங்குவதாக கூறி வழக்கின் விசாரணையை மே 5க்கு அமர்வு ஒத்திவைத்தது.
- டில்லி சிறப்பு நிருபர் -