மத்திய அரசு அதிகாரிகள் வழக்கை மாநில போலீஸ் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம்
மத்திய அரசு அதிகாரிகள் வழக்கை மாநில போலீஸ் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம்
ADDED : நவ 30, 2024 04:46 AM

புதுடில்லி: 'மத்திய அரசு அமைப்புகளின் ஊழியர்கள், அதிகாரிகள் தொடர்புடைய வழக்குகளை மாநில விசாரணை அமைப்புகள் விசாரிக்க முடியும்' என உச்சநீதிமன்றம் நேற்று கருத்து தெரிவித்தது.
ஈ.டி., எனப்படும், அமலாக்கத்துறையின் மதுரை துணை மண்டல அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் அங்கித் திவாரி.
இடைக்கால ஜாமின்
இவர், கடந்த ஆண்டு டிச., 1ல், மாநில அரசு அதிகாரியிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரது ஜாமின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், அங்கித் திவாரியை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியும், இந்த விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 'லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை விசாரிக்கும் எங்கள் நடைமுறைகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'மத்திய அரசு அதிகாரிகள் குற்றங்களில் ஈடுபடும் போது அதை மத்திய விசாரணை அமைப்புகளும் விசாரிக்கலாம், மாநில விசாரணை அமைப்புகளும் விசாரிக்கலாம். மாநில அரசு விசாரணை அமைப்புகள் விசாரிக்கவே கூடாது என்று நாங்கள் கூறவே இல்லை' என, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
உரிமை இல்லை
'அதே நேரத்தில், மத்திய அரசு அதிகாரிகள் தொடர்புடைய வழக்குகள் அனைத்திலும் மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை கூடாது என, கேட்கவும் முடியாது.
'ஏனெனில், மத்திய அரசு அதிகாரிகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும், மாநில விசாரணை அமைப்புகள் விசாரிப்பது சரியானதாக இருக்காது. நம் கூட்டாச்சி அமைப்பும் அவ்வாறு கட்டமைக்கப்படவில்லை' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், 'குற்றம் சாட்டப்பட்டுள்ள அங்கித் திவாரி தன்னை எந்த விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும் என கேட்க முடியாது; அவருக்கு அதற்கான உரிமை கிடையாது' என, திட்டவட்டமான வாதத்தை முன்வைத்தார்.
அதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், 'அங்கித் திவாரி தனக்கு ஜாமின் போன்ற நிவாரணங்களை மட்டுமே கேட்க முடியும்' என கூறினர்.