சென்னை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு புலனாய்வு குழுவை நியமித்தது சுப்ரீம் கோர்ட்
சென்னை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு புலனாய்வு குழுவை நியமித்தது சுப்ரீம் கோர்ட்
ADDED : நவ 19, 2024 02:32 AM
புதுடில்லி, சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரில் உள்ள அரசு பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமிக்கு, கடந்த ஆக., 29ல் வயிற்று வலி ஏற்பட்டது. இது குறித்து, பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார்.
'வீடியோ'
அவரை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
இது குறித்து புகார் அளிக்க, அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சிறுமியுடன் பெற்றோர் சென்றனர்.
பக்கத்து வீட்டில் வசிக்கும், 14 வயது சிறுவன் மீது புகார் அளித்தனர். அங்கிருந்த இன்ஸ்பெக்டர், சிறுமியின் பெற்றோரை தாக்கியதாகவும், புகாரில் அவர்கள் தெரிவித்த சிறுவனின் பெயரை நீக்க வலியுறுத்தியதாகவும் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது.
மறுநாள் ஆக., 30ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டு சிறுவனை, செப்., 1ல் போலீசார் கைது செய்தனர்.
சிறுவர்கள் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்ட அந்த சிறுவன், பின் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இந்த பலாத்கார வழக்கு தொடர்பாக, சிறுமியின் வீட்டருகே வசிக்கும் சதீஷ், 31, என்ற இளைஞரை, செப்., 12ல் கைது செய்தனர்.
இதற்கிடையே, போலீஸ் ஸ்டேஷனில் தாக்கப்பட்டது குறித்து சிறுமியின் பெற்றோர், 'வீடியோ' ஒன்றை வெளியிட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.
உரிய பாதுகாப்பு
அப்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'இந்த வழக்கில், போலீஸ் விசாரணை மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
'எனவே இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்படுகிறது. சிறுமியின் பெற்றோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக போலீஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ.,க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
மேலும், இந்த வழக்கை தமிழர் அல்லாத தமிழக பிரிவை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஏழு பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்றும், அவர்களின் பெயர்களை பரிந்துரைக்கும்படியும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சிறப்பு விசாரணை குழுவில் இடம்பெறவுள்ள அதிகாரிகள் பட்டியலை சமர்ப்பிக்கும்படி தமிழக அரசிடம் கேட்டிருந்தோம். அந்த பட்டியல் எங்கே?
சி.பி.ஐ..,யிடம் வழக்கை ஒப்படைத்தால் விசாரணை முடிய நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் ஆகும். எனவே, காவல்துறையின் சிறந்த அதிகாரிகள், மூத்த அதிகாரிகளை வைத்து விசாரணை நடத்தலாம்.
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிடுகிறோம். சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்.
விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன் சமர்பிக்க வேண்டும்.
அறிக்கை அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கை விசாரிக்க உரிய அமர்வை ஏற்படுத்த வேண்டும்.
அந்த அமர்வு முன், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையை வாரம் ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விசாரணையை, உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும்.
வழக்கு செலவுக்காக 50,000 ரூபாய் மற்றும் இதர செலவுகளுக்காக 25,000 ரூபாயை சிறுமியின் தாய்க்கு தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.