மதரசாக்களை மூட பரிந்துரைத்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
மதரசாக்களை மூட பரிந்துரைத்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
ADDED : அக் 22, 2024 01:45 AM
புதுடில்லி, அரசு நிதியுதவியுடன் இயங்கும் மதரசாக்களை மூட பரிந்துரைத்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷனின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மதரசாக்களில் உள்ள மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்கு மாற்ற, உத்தர பிரதேசம், திரிபுராவில் ஆளும் பா.ஜ., அரசுகள் சமீபத்தில் உத்தரவிட்டன.
பாதுகாப்பு
மதரசாக்களின் செயல்பாடு, கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டத்துக்கு எதிராக இருப்பதாக கூறி, அவற்றில் படித்து வரும் மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்றும்படி அனைத்து மாநிலங்களுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷனின் பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரைக்கு எதிராக, ஜமியத் உலமா- - இ- - ஹிந்த் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு கூறியதாவது:
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷன், கடந்த ஜூன் 7 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வெளியிட்ட பரிந்துரையின்படி எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மேலும், உ.பி., - திரிபுரா அரசுகளின் உத்தரவுகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
அறிவிப்பு
இந்த விவகாரத்தில், மாநிலங்கள் பிறப்பிக்கும் எந்தவொரு உத்தரவும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படும்.
இது தொடர்பாக, மத்திய - மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். உ.பி., - திரிபுராவை தவிர, மற்ற மாநிலங்களையும் பிரதிவாதியாக இந்த மனுவில் ஜமியத் உலமா- - இ -- ஹிந்த் அமைப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.