sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மசோதாக்கள் மீது ஜனாதிபதி முடிவெடுக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

/

மசோதாக்கள் மீது ஜனாதிபதி முடிவெடுக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

மசோதாக்கள் மீது ஜனாதிபதி முடிவெடுக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

மசோதாக்கள் மீது ஜனாதிபதி முடிவெடுக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

61


UPDATED : ஆக 22, 2025 08:54 AM

ADDED : ஆக 22, 2025 12:58 AM

Google News

61

UPDATED : ஆக 22, 2025 08:54 AM ADDED : ஆக 22, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணை தாமதம் ஆகும்போது, அதில் தலையிட்டு ஜனாதிபதி எப்படி தீர்ப்பு வழங்க முடியாதோ, அதேபோல மசோதாக்கள் மீது முடிவு எடுக்கும் விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது' என, மத்திய அரசு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தது.

மாநில சட்டசபைகளில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க, கவர்னர் மற்றும் ஜனாதி பதிக்கு காலக்கெடு விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பின் மீது, 14 கேள்விகளை எழுப்பி ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுதிய கடிதம் தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் கடந்த இரு தினங்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டு வருகிறார். மூன்றாவது நாளாக நேற்றும் விசாரணை நடந்தது. அதன் விபரம்:

துஷார் மேத்தா: கவர்னரின் அதிகார வரம்பு என்ன என்பதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என அரசியல் சாசனம் தெளிவாக சுட்டிக்காட்டியும், மசோதா மீது ஒப்புதல் அளிக்க உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயித்தது சரியானது அல்ல.

நம் ஜனநாயகத்தில் அதிகார வரம்புகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றுடன் ஒன்று மோதும் போது அது பிரச்னையை உருவாக்கும். எனவே, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் எந்த கால நிர்ணயமும் செய்ய வேண்டாம்.

நீதிபதிகள்: மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு எதையும் அரசியல் சாசனம் தெரிவிக்கவில்லை என்றால், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான ஒரு புதிய செயல் முறையை நாம் தான் வகுக்க வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுத்த அரசு அனுப்பும் ஒரு மசோதா எப்படி செயல்பாட்டுக்கு வராமல் இருக்க முடியும்?

எவ்வளவு நாட்களுக்கு அதன் மீது எந்த முடிவையும் எடுக்காமல் கவர்னர் வைத்திருக்க முடியும்? கவர்னரின் செயல்படாத தன்மைக்கு எதிராக மாநில அரசு நீதிமன்றத்தை நாடினால், நாங்கள் அதை விசாரிக்காமல் இருக்க முடியுமா?

உச்ச நீதிமன்றம் என்பது அரசியல் சாசனத்தின் பாதுகாவலர். அரசியல் அமைப்பின் பணியாளர்கள் சரியான காரணம் இல்லாமல் செயல்படாமல் இருக்கும் போது அதில் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லையா? எங்களது கைகள் கட்டப்பட்டிருக்கிறது என நீங்கள் கூற வருகிறீர்களா?

துஷார் மேத்தா: சட்டசபையால் நிறைவேற்றப்படும் மசோதா அரசியலமைப்புக்கு எதிராக இருந்தாலும், தேசத்திற்கு எதிராக இருந்தாலும் அதை நிறுத்தி வைக்க முடியும். அதன் வாயிலாக அந்த மசோதாவை நீர்த்துப்போக செய்ய கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. கவர்னர் வெறும் காட்சி பொருளாக இருப்பவர் கிடையாது. அவர் மத்திய அரசின் பிரதிநிதி. மாநில அமைச்சர்களுக்கு ஒரு வழிகாட்டியாக, நண்பராக இருக்கக் கூடியவர்.

எல்லா விவகாரங்களிலும் மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என கூறுவது தவறு. கவர்னர் ஒரு மசோதாவுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், உடனடியாக நீதிமன்றத்தை நாட வேண்டும் என்பது கிடையாது. அதற்கு பல வழிகளில் தீர்வு காண முடியும்.

மேலும், மசோதா விவகாரங்களில் கவர்னருக்கு அரசியல்சாசனப் பிரிவு 200 எல்லையற்ற அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. அதில், நீதிமன்றங்கள் தலையிட முடியாது.

நீதிபதிகள்: மசோதா மீது கவர்னர் நீண்ட காலம் முடிவெடுக்காமல் இருந்தால், அதற்குள் நீதிமன்றம் தலையிட முடியாதா? அப்படியானால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பாதுகாப்பது யார்?

கவர்னருக்கு தான் எல்லையற்ற அதிகாரங்கள் இருக்கிறது என்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயலற்றதாகி விடாதா? மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிகளில் இருந்தாலும் அவர்கள் செயல்படவில்லை என்றால், அவர்களை சரிப்படுத்தும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு கிடையாதா?

துஷார் மேத்தா: தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. அதற்குப் பின் அதை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது. இது, நிர்வாக ரீதியிலான விவகாரத்திலும் உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டதாக தான் பார்க்க முடியும்.

நீதிபதிகள்: மசோதாக்கள் மீது நான்கு ஆண்டுகளாக எந்த ஒப்புதலும் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இப்படி முடிவெடுக்காமல் இருந்தால், நிர்வாகத்தை எப்படி அவர்கள் செயல்படுத்துவர்?

துஷார் மேத்தா: ஒரு நபர் ஏழு ஆண்டுகளாக தன் வழக்கு விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறார்.

நீதிமன்றத்தில் அந்த வழக்கு ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. ஆனால், அந்த வழக்கின் அதிகபட்ச தண்டனையே ஏழு ஆண்டுகள் தான். 'எனவே தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்' என, ஜனாதிபதியிடம் அவர் முறையிட்டால் ஜனாதிபதி அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து விட முடியுமா?

அதைப் போலத்தான் இந்த மசோதா விவகாரங்களிலும் எங்கு முறையிட வேண்டுமோ அங்கு சென்று பேச வேண்டும். அனைத்திற்கும் நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு காணக்கூடாது. இப்படி காரசார விவாதம் நடந்த நிலையில், நீதிமன்ற அலுவல் நேரம் முடிந்ததை அடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us