'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி குறித்து உச்ச நீதிமன்றம் கவலை! இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குமாறு அறிவுறுத்தல்
'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி குறித்து உச்ச நீதிமன்றம் கவலை! இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குமாறு அறிவுறுத்தல்
ADDED : நவ 04, 2025 03:29 AM

'டிஜிட்டல் முறையில் கைது செய்வதாக மிரட்டி பணம் பறிக்கும் மோசடிகளை, இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வயதானவர்களே இந்த மோசடிக்கு குறிவைக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும், உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாடு முழுதும் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. அச்சடிக்கப்பட்ட பணத்தின் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
அதே வேளையில், டிஜிட்டல் முறையில் நடக்கும் பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்களும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.
குறிப்பாக, மொபைல் போனில் 'வீடியோ கால்' செய்து, சி.பி.ஐ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் போல பேசி, டிஜிட்டல் முறையில் அரெஸ்ட் செய்து விட்டதாக மிரட்டுகின்றனர்.
இந்த மிரட்டல்களுக்கு அஞ்சும் அப்பாவி மக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் மோசடியாக பணம் பறிக்கப்படுகிறது. இந்த மோசடி, 'டிஜிட்டல் அரெஸ்ட்' என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த மோசடி தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.
நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன், இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது. மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் மோசடியாகவும் இருக்கிறது.
மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது என்பது குறித்து தகவல் இல்லை. நம் நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறை இந்த மோசடிகளை எப்படி கையாள்கிறது என்பதும் தெரியவில்லை.
அந்த துறைகளின் திறனை நாம் வலிமையாக்க வேண்டும். அதை செய்ய தவறினாலோ, புறந்தள்ளினாலோ இது மிகப்பெரிய பிரச்னையாக உருவாகும்.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மூலம் நம் நாட்டில் மட்டும், 3,000 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பறிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
குறிப்பாக வயதானவர்கள் குறிவைத்து ஏமாற்றப்படுவது மிகுந்த வேதனையை தருகிறது. எனவே, இரும்புக்கரம் கொண்டு இந்த மோசடியை நாம் தடுத்தாக வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கையை தயார் செய்து சீலிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்துள்ளது.
அதில் உள்ள விபரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. அவை மிகவும் முக்கியமானவை என்பதால், பொதுவெளியில் தற்போதைக்கு வெளியிட முடியாது.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி சம்பந்தமாக, நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான விசாரணை அவசியம். எனவே, இது தொடர்பான உரிய உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும். அதுவரை இவ்வழக்கை வரும் 10ம் தேதி வரை ஒத்திவைக்கிறோம்.  இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
-- டில்லி சிறப்பு நிருபர் -

