தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்... கண்டனம்! தெரு நாய்க்கடி விவகாரத்தில் பிரமாண பத்திரம் கேட்கிறது
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்... கண்டனம்! தெரு நாய்க்கடி விவகாரத்தில் பிரமாண பத்திரம் கேட்கிறது
ADDED : அக் 28, 2025 06:53 AM

தெரு நாய்க்கடி விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தமிழகம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், நவ., 3ல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அம்மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தெரு நாய்க்கடி விவகாரம் மிகவும் தீவிரமானது என்றும், இதனால் வெளிநாடுகளில் நம் நாடு சிறுமைப்படுத்தி காட்டப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. தலைநகர் டில்லியில் தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், அது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிந்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
ஆக., 11ல் விசாரித்த நீதிமன்றம், டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கும்படி உத்தரவிட்டது.
இதற்கு ஒருசில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை, ஆக., 22ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், தெரு நாய்க்கடி சம்பவத்தை டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்துடன், நாடு முழுதும் விரிவுபடுத்தியது.
அறிவுறுத்தல் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை வழக்கில் சேர்த்த நீதிமன்றம், விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகளுக்கு இணங்க, தற்போதுள்ள நாய் கூண்டுகள், கால்நடை மருத்துவர்கள், நாய் பிடிக்கும் பணியாளர்கள், பிரத்யேக வாகனங்கள் உள்ளிட்ட முழுமையான தகவல்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
மேலும், தெரு நாய்க்கடி சம்பவத்தை சமாளிப்பது தொடர்பாகவும், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாகவும், ஏற்கனவே இருக்கக்கூடிய தெரு நாய் கருத்தரிப்பு தடுப்பு அறுவை சிகிச்சையை மாநில அரசுகள் எந்த அளவிற்கு செயல்படுத்தி வருகிறது உள்ளிட்டவை தொடர்பாகவும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தெலுங்கானா, மேற்கு வங்கம், டில்லி மாநகராட்சி தவிர வேறு எந்த மாநிலங்களும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்டு கோபம் அடைந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தெரு நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி, ஆக., 22ல் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தோம். ஆனால், மேற்கு வங்கம், தெலுங்கானாவை தவிர வேறு எந்த மாநிலங்களும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை.
அபராதம் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் நம் நாடு சிறுமைப்படுத்தி காட்டப்படுகிறது.
மேற்கு வங்கம், தெலுங்கானா தவிர்த்து, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்கள் நவ., 3 காலை, 10:30 மணி அளவில் நேரில் ஆஜராகி, தாக்கல் செய்யாததற்கான காரணத்தை விளக்க வேண்டும் .
டில்லி மாநகராட்சி பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ள நிலையில், டில்லி அரசு ஏன் தாக்கல் செய்யவில்லை? டில்லியில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
அப்படியிருக்கையில் டில்லி அரசு ஏன் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை? நவ., 3ல், டில்லி அரசின் தலைமை செயலரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இல்லை எனில், அபராதம் விதிக்க நேரிடும்.
அரசு அதிகாரிகள் செய்தித்தாள்களை படிப்பதில்லையா; சமூக ஊடகங்களை பார்ப்பதில்லையா? அவர்களுக்கு முறையான நோட்டீஸ் அனுப்ப வேண்டுமா? ஆக., 22ல் வெளியான உத்தரவில் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதிகாரிகள் தாமதத்திற்கான சாக்குப்போக்குகளை கூற வேண்டாம். இது ஒரு பொதுநல வழக்கு. இதை அறிந்த உடன் அதிகாரிகள் தாமாக முன்வந்திருக்க வேண்டும்.
பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தலைமை செயலர்கள், நவ., 3ல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். தவறினால், நாங்கள் நீதிமன்றத்தை ஆடிட்டோரியத்தில் நடத்துவோம். இவ்வாறு நீதிபதிகள் கடுமையுடன் குறிப்பிட்டனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -:

