சந்திரபாபு நாயுடு மேல்முறையீட்டு வழக்கு: மாறுபட்ட தீர்ப்பால் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
சந்திரபாபு நாயுடு மேல்முறையீட்டு வழக்கு: மாறுபட்ட தீர்ப்பால் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
ADDED : ஜன 16, 2024 01:45 PM

புதுடில்லி: திறன் மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைதான ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்ததால், வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ரூ.371 கோடி திறன் மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த நவம்பர் 20ல் ஆந்திர மாநில ஐகோர்ட் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கியது. இதனிடையே தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) ரத்து செய்யக்கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை ஆந்திர ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸ், நீதிபதி பீலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று தீர்ப்பளித்தது. 'ஊழல் தடுப்பு சட்டத்தில் அரசு ஊழியரை விசாரிக்க முன் அனுமதி பெற வேண்டும். ஆனால் சந்திரபாபுவை விசாரிக்க உரிய முன் அனுமதி பெறவில்லை' என நீதிபதி அனிருத்தா போஸ் தீர்ப்பளித்தார்.
அதேநேரத்தில், 'நேர்மையற்ற அரசு ஊழியர்களை விசாரிக்க முன் அனுமதி பெறுவதை குறையாக கருத முடியாது. எனவே எப்ஐஆர் பதிவு செய்ததை ரத்து செய்ய முடியாது' எனக் கூறிய நீதிபதி பீலா திரிவேதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியதால், இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சந்திரபாபு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை இனி தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து தீர்ப்பளிக்கும்.