கவர்னர் அனுப்பும் மசோதா மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கெடு
கவர்னர் அனுப்பும் மசோதா மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கெடு
UPDATED : ஏப் 13, 2025 07:56 AM
ADDED : ஏப் 13, 2025 01:29 AM

'மசோதாவை கவர்னர்கள் அனுப்பி வைத்தால், அதன் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்துள்ளது. மசோதா விஷயத்தில் முடிவெடுக்க ஜனாதிபதிக்கு, உச்ச நீதிமன்றம் இது போல் காலக்கெடு நிர்ணயித்துள்ளது, இதுவே முதல் முறை.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், கவர்னர் ரவி காலம் தாழ்த்துவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
தனித்தனி தொகுப்பு
இந்த வழக்கில் கடந்த 8ல் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், கவர்னர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்ததோடு, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க அல்லது முடிவெடுக்க காலக்கெடு விதித்தது. 415 பக்கங்கள் அடங்கிய இந்த வழக்கின் மிக விரிவான தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில், என்னென்ன தேதியில் எந்தெந்த மசோதாக்கள் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக கவர்னருக்கு மாநில அரசால் வழங்கப்பட்டது; அதன் மீது முடிவெடுக்க கவர்னர் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டார்.
மசோதாவின் பின்னணி; மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக் கோரி சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கவர்னருக்கு எழுதிய கடிதம் உள்ளிட்ட பல விஷயங்கள், தேதி வாரியாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அது மட்டுமின்றி, ஏற்கனவே தமிழக அரசால் கவர்னருக்கு அனுப்பப்பட்ட, சிறை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்பு, தேர்வு வாரியத்தின் நியமனங்கள் தொடர்பான கோப்பு ஆகியவற்றின் மீது கவர்னர் மேற்கொண்ட தாமதம் ஆகியவை குறித்து தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பொன்முடி உள்ளிட்ட சில அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தது போன்ற தமிழக கவர்னரின் கடந்த கால செயல்பாடுகளும், தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, அபிஷேக் மனு சிங்வி, வில்சன் ஆகியோரது வாதங்களும், கவர்னர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணியின் வாதங்களும் முழுமையாக பதிவு செய்யப்பட்டு உள்ளன.
கவர்னரின் அதிகாரங்கள் குறித்த ராஜமன்னார் கமிஷன், சர்க்காரியா கமிஷன், பொன்சி கமிஷன் போன்றவற்றின் சாராம்சங்களும், சர்வதேச அளவில் மசோதாக்கள் மீது ஒப்புதல் வழங்குவதற்காக இருக்கக்கூடிய சட்ட விதிமுறைகள் உள்ளிட்டவையும், தனித்தனி தொகுப்புகளாக தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சட்ட விரோதம்
பக்க எண் - 388ல் இருந்து, கவர்னரின் அதிகாரம் தொடர்பாக, இந்த வழக்கில் தீர்ப்பாக கொடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் இடம் பெற்றுள்ளன.
அதன்படி, அரசியல் சாசன பிரிவு - 200ன் படி, மாநில கவர்னர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முடியும்; அதை நிறுத்தி வைக்கவும் முடியும். மூன்றாவதாக, ஜனாதிபதிக்கு மசோதாவை அனுப்பி வைக்க முடியும்.
இது ஏற்கனவே, பஞ்சாப் அரசு தொடர்பான வழக்கில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு சிறப்பு அதிகாரமும், அரசியல் சாசன பிரிவு - 200ன் கீழ் கவர்னருக்கு வழங்கப்படவில்லை.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஷரத்துகள், மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்க கவர்னருக்கு அனுமதி வழங்கவில்லை.
மேலும், இரண்டாவது முறையாக ஒரு மசோதா ஒப்புதலுக்காக வரும் போது, அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவும் கவர்னருக்கு எந்த அதிகாரமும் கொடுக்கப்படவில்லை.
ஏற்கனவே குறிப்பிடப் பட்டுள்ள சட்டத்தின்படி, இரண்டாவது முறை மசோதா வந்தால், அதற்கு கவர்னர் நிச்சயம் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும்.
அதன்படி பார்த்தால், தற்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்தது சட்ட விரோதம் மற்றும் ரத்து செய்ய உகந்தது.
நடவடிக்கை
இந்த மசோதாக்கள் மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதுவும் ரத்து செய்யப்பட வேண்டியது என, தீர்ப்பில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் சாசன பிரிவு - 200ன் கீழ், மசோதா மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வெளிப்படையான கால நிர்ணயம் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அதற்காக எவ்வளவு நாள் வேண்டுமானாலும் எடுக்கலாம் என அர்த்தமில்லை.
ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது, கவர்னர் முடிவெடுக்காமல் இருப்பது, சம்பந்தப்பட்ட மாநில அரசின் சட்டமியற்றும் அமைப்பையே தடை செய்வதாக மாறிவிடும்.
எனவே, சட்ட ஷரத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக என்பதை, அவசரமாக முடிவெடுக்க வேண்டும் என்பதாகத் தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால், இந்த நீதிமன்றமே அத்தகைய கால நேரத்தையும்
நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.
கவர்னருக்கான வாய்ப்பு
மாநில அமைச்சரவையின் ஆலோசனை படி, மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்தாலும் அல்லது ஒப்புதல் வழங்குவதை நிறுத்தி வைத்தாலும், அதை அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் கவர்னர் செய்து முடிக்க வேண்டும்.
ஒருவேளை, மசோதாக்கள் மீது அமைச்சரவையின் ஆலோசனையை கேட்க விரும்புகிறார் என்றால், அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் அவற்றை அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு மாறாக, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மசோதாக்களை அனுப்பி வைக்க கவர்னர் முடிவெடுக்கிறார் என்றால், அதை மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும். அதே மசோதாக்களை அமைச்சரவை மீண்டும் மறுபரிசீலனைக்காக சமர்ப்பித்தால், இந்த முறை ஒரே மாதத்திற்குள், அவற்றுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என, தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கவர்னர் அந்தந்த மாநில அமைச்சரவையின் ஆலோசனைபடி தான் செயல்பட வேண்டும் என்பதை, தீர்ப்பில் மீண்டும் தெளிவாக குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள பல தீர்ப்புகளை சுட்டிக்காட்டி உள்ளனர்.
ஜனாதிபதிக்கான வாய்ப்பு
அரசியல் சாசன பிரிவு - 201ன் படி, செயல்படாமல் இருப்பதற்காக 'வீட்டோ' அதிகாரம் ஜனாதிபதிக்கு கொடுக்கப்படவில்லை. மசோதாக்கள் மீது முடிவெடுக்க, அவருக்கு இரண்டே வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று, ஒப்புதல் வழங்குவது; மற்றொன்று அதை நிறுத்தி வைப்பது.
அதை விடுத்து, ஒரு அரசியல் சாசன பிரதிநிதி தன்னிச்சையாக செயல்படுவதற்கு எந்த அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில், அரசியல் சாசன பிரிவு - 201ஐ பயன்படுத்தி செயல்பட ஜனாதிபதிக்கு எந்த கால வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.
ஆனால், தற்போதைய தீர்ப்பின்படி, மாநில கவர்னரால் ஒரு மசோதா அனுப்பி வைக்கப்படுகிறது என்றால், கிடைக்கப் பெற்ற தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள், அதன் மீது ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும். இல்லை என்றால், அதை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம்.
அவ்வாறு நாடினால், அது நீதிமன்ற விசாரணைக்கு உகந்தது தான் எனவும் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை, அனைத்து மாநில அரசின் தலைமை செயலர்களுக்கும், உயர் நீதிமன்றங்களுக்கும் அனுப்பி வைக்கும்படியும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டில்லி சிறப்பு நிருபர் -