சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் சொத்து பட்டியல் வெளியீடு!: நீதிமன்ற இணையதளத்தில் பார்க்கலாம்
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் சொத்து பட்டியல் வெளியீடு!: நீதிமன்ற இணையதளத்தில் பார்க்கலாம்
UPDATED : மே 07, 2025 07:29 AM
ADDED : மே 07, 2025 01:05 AM

புதுடில்லி: நீதித்துறையின் மீதான வெளிப்படைத்தன்மை மற்றும் பொது மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கான குறிப்பிடத்தக்க முயற்சியாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விபரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் நீதித்துறையின் மீது கரும்புள்ளியாக படிந்தது.
பொதுமக்கள் மத்தியில் நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் அனைத்து நீதிபதிகளும் ஏப்., 1ல் கூடி விவாதித்தனர். அதில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விபரங்களை பொதுவெளியில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, உச்ச நீதிமன்றத்தின், 33 நீதிபதிகளில், 21 பேரின் சொத்து விபரங்கள் நீதிமன்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. மற்றவர்களின் சொத்து விபரங்களும் படிப்படியாக வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்து விபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. ஆனால், அது பொதுவெளியில் வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்படும்.
சில சந்தர்ப்பங்களில் நீதிபதிகள் தானாக முன்வந்து தங்கள் சொத்து விபரங்களை பொதுவெளியில் சமர்ப்பித்த சம்பவங்களும் உண்டு. ஆனால், அது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.