மணிப்பூர் நிவாரண முகாம்களில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆய்வு: விரைவில் அமைதி திரும்பும் என நம்பிக்கை
மணிப்பூர் நிவாரண முகாம்களில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆய்வு: விரைவில் அமைதி திரும்பும் என நம்பிக்கை
ADDED : மார் 23, 2025 12:02 AM

சுராசந்த்பூர்: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களிடம் கலந்துரையாடிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, 'அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்க மணிப்பூர் மக்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023 மே மாதத்தில், மெய்டி - கூகி பழங்குடியினர் இடையே மோதல் வெடித்தது.
பதற்றம்
இது, வன்முறையாக மாறி மாநிலம் முழுதும் பரவியது. அடுத்த 10 மாதங்களுக்கு மேலாக நடந்த கலவரத்தில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் வன்முறை சம்பவங்கள் குறைந்தாலும், ஆங்காங்கே போராட்டங்களும், தாக்குதல்களும் தொடர்வதால் மணிப்பூரில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைவருமான பி.ஆர்.கவாய் தலைமையிலான ஆறு பேர் அடங்கிய நீதிபதிகள் குழு, நேற்று மணிப்பூர் சென்றது.
மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் 20ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சென்றுள்ள குழுவில், பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முதலில், சுராசந்த்பூரில் உள்ள சத்பவனா மண்டப நிவாரண மையத்தைப் பார்வையிட்ட நீதிபதிகள், அங்கிருந்த உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்களுடன் கலந்துரையாடினர்.
பின், அங்கு லாம்காவில் உள்ள மினி தலைமை செயலகத்தில் இருந்தபடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக சட்ட சேவை முகாம், மருத்துவ முகாம், சட்ட உதவி மருத்துவமனை ஆகியவற்றை நீதிபதி பி.ஆர்.கவாய் துவக்கி வைத்தார்.
நிவாரண பொருட்கள்
அப்போது அவர் கூறியதாவது:
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்கள், அமைதியையும், நல்லிணக்கத்தையும் மீட்டெடுக்க ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
நான் தலைவராக உள்ள தேசிய சட்ட சேவைகள் ஆணையம், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க ஏற்கனவே, 1.5 கோடி ரூபாயை வழங்கியது.
இதுதவிர, மேலும் 2.5 கோடி ரூபாய் வழங்க அனுமதி அளித்துள்ளது.
அடிப்படை சுகாதார சேவைகள் வழங்க மாநிலம் முழுதும் 109 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மோதல் காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட மாணவர்கள், பள்ளிகளில் மீண்டும் சேர்ந்து கல்வி கற்பதை கல்வி நிறுவனங்களும், பொதுமக்களும் உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.