வழக்குகளை தவிர்க்கும் அரசு தரப்பு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி
வழக்குகளை தவிர்க்கும் அரசு தரப்பு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி
ADDED : டிச 13, 2024 01:41 AM

புதுடில்லி :மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்கள், பல்வேறு வழக்குகளில் தொடர்ச்சியாக ஆஜராகாமல் அலட்சியம் காட்டுவது அதிருப்தி அளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
ராஜஸ்தானில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரியில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் இடம் அளிக்கக் கோரி, மாணவர் ஒருவர் விண்ணப்பித்து இருந்தார். இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் அவர் மனு செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், இது மாற்றுத்திறனாளிகளுக்குரிய சான்றிதழ் தொடர்பான விவகாரம் என்பதால், நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மாணவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள் மத்திய அரசின் சுகாதார சேவைகள் இயக்குநர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
இதையடுத்து வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுகாதார சேவைகள் பிரிவு இயக்குநர் ஜெனரல் மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜித் பானர்ஜி ஆஜரானார்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
வழக்கு விசாரணை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியும், அரசு தரப்பில் நேற்று முன்தினம் ஒருவரும் ஆஜராகவில்லை. ஏன் இப்படி நடக்கிறது?
உங்களுக்காக மாலை 4:00 மணி வரை காத்திருந்தோம். இதுபோல நடப்பது முதல்முறை அல்ல. பல்வேறு வழக்கு களிலும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாமல் அலட்சியம் காட்டுகிறீர்கள்.
வேறு வழியின்றி தான் அரசு அதிகாரியையும் ஆஜராகும்படி உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசு அதிகாரிகளை நீதிமன்றத்துக்கு அழைப்பதில் எங்களுக்கு விருப்பமோ, மகிழ்ச்சியோ இல்லை.
மாற்றுத்திறனாளி சம்பந்தப்பட்ட வழக்கு என்பதையும் பொருட்படுத்தாமல் அரசு தரப்பு வழக்கறிஞர் காட்டிய அலட்சியத்தால், அந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேல்முறையீடு செய்துள்ள மாற்றுத்திறனாளிக்கு ராஜஸ்தான் அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இடம் ஒதுக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.