ADDED : மே 16, 2025 11:24 PM

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தின், 11வது பெண் நீதிபதியாக பதவி வகித்த, குஜராத்தைச் சேர்ந்த நீதிபதி பேலா எம்.திரிவேதி நேற்று பணி ஓய்வு பெற்றார்.
உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாற்றில், 11வது பெண் நீதிபதியாக 2021 ஆக., 31ல் பேலா எம்.திரிவேதி பதவியேற்றார். மூன்றரை ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, முக்கிய தீர்ப்புகளை அளித்துள்ளார்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்து, 2022ல் உத்தரவிட்டபோது, அந்த அரசியல் சாசன அமர்வில் இவரும் இருந்தார்.
இதுபோல, 'எஸ்.சி., உள்ளிட்ட பட்டியலின பிரிவுக்குள், துணை வகைப்பாடுகள் செய்து, உள்ஜாதிகளை பிரிப்பதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு' என்று, 2024ல் உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற ஏழு நீதிபதிகள் அரசியல் சாசன அமர்விலும் இடம் பெற்றார்.
ஆனால், ஏழு நீதிபதிகளில் பேலா மட்டுமே, 'தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்குள் ஒரு ஜாதியை சேர்க்கவோ, நீக்கவோ பார்லிமென்டுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு; மாநில அரசுகளுக்கு கிடையாது' என தீர்ப்பில் கூறினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறுவதையொட்டி, கடைசி பணி நாளான நேற்று, சம்பிரதாயப்படி, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான சிறப்பு அமர்வில் பேலா எம்.திரிவேதி இடம் பெற்றார்.
நீதிபதி பேலாவுக்கான பிரிவு உபசார விழாவை புறக்கணிக்கப் போவதாக, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. இதை, தலைமை நீதிபதி கவாய் வெளிப்படையாக கண்டித்தார்.