ADDED : ஜன 04, 2025 12:37 AM

புதுடில்லி:   உச்ச நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமார் நேற்று ஓய்வு பெற்றார்.
கடந்த 1960ல் கேரளாவில் பிறந்த ரவிகுமார் விலங்கியல் படிப்பில் பட்டப் படிப்பு பெற்றவுடன் கோழிக்கோட்டில் உள்ள அரசு சட்டக் கல்லுாரியில் வழக்கறிஞர் படிப்பு முடித்தார்.
கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன்  பணியை மேற்கொண்டு வந்த அவர், கேரள அரசு சிறப்பு வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார்.
கடந்த 2009ல், கேரள உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2021ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
வரும் 5ம் தேதியுடன் ஓய்வுபெறும் இவருக்கு, நேற்றே கடைசி பணி நாள்.
இதையடுத்து, மரபுப்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் அவருக்கு பிரிவு உபச்சாரம் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் கபில் சிபல்,  தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர், நீதிபதி ரவிகுமாரின் சேவையை பாராட்டி பேசினார்.

