ADDED : நவ 14, 2024 12:48 AM
புதுடில்லி: உச்ச நீதிமன்ற சட்ட சேவை குழு தலைவராக நீதிபதி சூர்யகாந்தை, தலைமை நீதிபதி நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பவர்களுக்கு சட்ட உதவியை வழங்குவதற்காக, உச்ச நீதிமன்ற சட்டக் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக இருந்த நீதிபதி பி.ஆர்.கவாய், தற்போது தேசிய சட்ட சேவைகள் அமைப்பின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அந்த இடத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்தை நியமித்து, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நேற்று உத்தரவிட்டு உள்ளார்.
தேசிய சட்ட சேவை குழு அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியும், உச்ச நீதிமன்ற சட்ட சேவை குழுவின் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியும் நியமிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி தற்போது நியமிக்கப்பட்டுள்ள சூர்யகாந்த், 2018 அக்., 5ல் ஹிமாச்சல் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர், 2019 மே 24ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இவர் வரும் 2027 பிப்., 9ல் ஓய்வு பெறுகிறார்.