அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மீதான தடையை திரும்ப பெற்றது சுப்ரீம் கோர்ட்
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மீதான தடையை திரும்ப பெற்றது சுப்ரீம் கோர்ட்
ADDED : ஆக 09, 2025 04:29 AM
புதுடில்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமார், மீதமுள்ள தன் பதவிக்காலத்தில், எந்தவொரு குற்றவியல் வழக்குகளையும் விசாரிக்க விதிக்கப் பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நேற்று திரும்பப் பெற்றது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 7.23 லட்சம் ரூபாய் பணப் பரிவர்த்தனை தகராறு தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை, நீதிபதி பிரசாந்த் குமார் தலைமையில் நடந்தது.
புகார்தாரர் ஒரு தொழிலதிபர் என்பதால், அவரால் சிவில் விசாரணையை நடத்த முடியாது எனக் கூறி, இந்த வழக்கில் குற்றவியல் நடவடிக்கைகளை தொடர நீதிபதி அனுமதித்தார்.
இந்த தீர்ப்பு சர்ச்சையானதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து, கடந்த 4ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு:
இது முற்றிலும் சிவில் வழக்கு. இதை கிரிமினல் வழக்காக நீதிபதி பிரசாந்த் குமார் மாற்ற முயன்றது அபத்தமானது. இந்த உத்தரவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
நீதிபதி பிரசாந்த் குமார் ஓய்வு பெறும் வரை, அவரிடம் விசாரணைக்காக எந்தவொரு கிரிமினல் வழக்கையும் ஒப்படைக்கக் கூடாது.
இனி, உயர் நீதிமன்றத்தின் அனுபவமிக்க நீதிபதி அடங்கிய டிவிஷன் அமர்வில் மட்டுமே அமர்ந்து வழக்குகளை அவர் விசாரிக்க வேண்டும்.
எந்த சூழலிலும், தனி நீதிபதியாக கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கக் கூடாது.
இவ்வாறு உத்தரவிடப்பட்டது.
இது, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்களில், 13 பேர் அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், 'உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கூடாது' என, வலியுறுத்தினர்.
இதற்கிடையே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி சம்பந்தப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து, இந்த வழக்கு பட்டியலிடப்பட்டு நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீதிபதிகள் திரும்பப் பெற்றனர்.

