மாயமான குழந்தைகளை தேட இணையதளம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் ௴கோர்ட் உத்தரவு
மாயமான குழந்தைகளை தேட இணையதளம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் ௴கோர்ட் உத்தரவு
ADDED : செப் 25, 2025 01:19 AM
காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் புதிய இணையதளத்தை உருவாக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்ட நபரின் ஜாமின் மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, குழந்தைகள் நலன் சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதம்:
நாடு முழுதும் குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. கடத்தப்படும் குழந்தைகள், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு உடனடியாக கைமாற்றப்படுகின்றன. அந்த அளவிற்கு மிகப்பெரிய 'சிண்டிகேட்'டாக இது செயல்படுகிறது. எனவே, இதன் மீது விரிவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
பொதுவான இணைய தளத்தை இதற்காக அமைக்க வேண்டும். குழந்தை கடத்தலில் ஈடுபடுவோர் குறித்த விபரங்கள் அதில் முழுமையாக இடம் பெற்று இருக்க வேண்டும். இதில், சி.பி.ஐ., தேசிய புலனாய்வு அமைப்புகளும் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அதிக கவனம் செலுத்த வேண்டிய இந்த பிரச்னையில், தீர்வு காணக்கூடிய வகையில் அனைத்து மாநிலங்களையும் இணைத்து ஏன் ஒரு குழுவை மத்திய அரசு அமைக்கக் கூடாது?
மாயமான குழந்தைகளை தேடி கண்டுபிடிப்பதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடையே போதுமான ஒத்துழைப்பு இல்லை. அந்த புகார்களுக்கு தொடர்புடைய அதிகாரிகள் இடையே போதுமான ஒருங்கிணைப்பு தேவை.
இந்த வழக்குகளை தீர்க்க, மத்திய உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் மத்திய அரசு இணையதளத்தை உருவாக்க வேண்டும்.
இது தொடர்பான அறிவுறுத்தல்களை மத்திய அரசிடம் இருந்து பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்திக்கு உத்தர விடுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -