அ.தி.மு.க., பழனிசாமிக்கு எதிரான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை
அ.தி.மு.க., பழனிசாமிக்கு எதிரான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை
ADDED : ஜன 28, 2025 06:21 AM

புதுடில்லி : வேட்பு மனுவில் தகவல்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிரான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக மிலானி என்பவர், சேலம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
தள்ளுபடி
அதில், 'கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வேட்புமனுவில் சில சொத்து விபரங்களை தவறாக தெரிவித்துள்ளார்.
'சில உண்மைகளை குறிப்பிடாமல் மறைத்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.
சேலம் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்ததுடன், இந்த விவகாரத்தில் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கூறி, பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக பழனிசாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, ''இது நான்குஆண்டு பழைய வழக்கு. அடுத்த தேர்தலும் வரப்போகிறது. தற்போது பழனிசாமி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து வருகிறார். எனவே, இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.
ஒத்தி வைப்பு
இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், பழனிசாமி மீதான சேலம் நீதிமன்ற விசாரணை மற்றும் தமிழக போலீசாரின் விசாரணை ஆகியவற்றுக்கு இடைக்கால தடை விதித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் மற்றும் தமிழக போலீசார் ஆகிய தரப்பினர் நான்கு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து, விசாரணையை ஒத்தி வைத்தனர்.