'போக்சோ' வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை சிறப்பு அதிகாரத்தால் ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
'போக்சோ' வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை சிறப்பு அதிகாரத்தால் ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
ADDED : ஜூன் 10, 2026 08:11 PM

புதுடில்லி: 'போக்சோ' வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை, அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி, சில ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 படித்த போது, இளைஞர் ஒருவரை காதலித்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி கேட்க, அந்த இளைஞர் மறுத்துவிட்டார். இதையடுத்து, அவர் மீது சிறுமி போலீசில் புகார் அளித்தார்.
பாலியல் குற்றங்களுக்கு எதிராக குழந்தைகளை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமி இளம்பெண்ணான நிலையில், அவருக்கு வேறொரு நபருடன் திருமணம் நடந்தது. இளம்பெண்ணின் கடந்த கால வாழ்க்கையை அறிந்த கணவர், சில மாதங்களிலேயே அவரை விட்டு பிரிந்து சென்றார்.
இந்த சூழலில், சிறைக்கு சென்ற இளைஞர், ஜாமினில் வெளியே வந்தார். தன் முன்னாள் காதலி கணவரை பிரிந்து வாழ்வதை அறிந்து, அவரையே திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தன் கணவருக்கு எதிரான போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த பெண் மனு தாக்கல் செய்தார். கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, அதுல் எஸ். சந்தூர்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் விபரம்:
சில குறிப்பிட்ட வழக்குகளில், முழு நீதி வழங்குவதற்காக, அரசியலமைப்பு சட்டம் இந்த நீதிமன்றத்துக்கு தனி அதிகாரத்தை வழங்கியுள்ளது. அநீதியான சூழல்களை தவிர்க்க இந்த சிறப்பு அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த வழக்கின், தனித்துவமான சூழலை கருத்தில் வைத்து, அரசியலமைப்பு சட்டம் 142வது பிரிவின் கீழ் உள்ள எங்கள் முழு அதிகாரத்தை பயன்படுத்தி, போக்சோ சட்டப் பிரிவு 5(1)ன் கீழ், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து அவரை விடுவிக்கிறோம்.
இந்த வழக்கின் தனித்துவமான சூழலின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. வேறு எந்த நோக்கத்திற்காகவும், இந்த உத்தரவு முன்னுதாரணமாக கருதப்படாது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
