மாவட்ட நீதிபதிகள் பதவி உயர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கேள்வி
மாவட்ட நீதிபதிகள் பதவி உயர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கேள்வி
ADDED : அக் 15, 2025 03:21 AM
'மாவட்ட நீதிபதிகளாக இருந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றவர்கள் எத்தனை பேர்' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
'நீதித்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு கிடைக்கும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்' எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதன் விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், சூரியகாந்த், விக்ரம் நாத், வினோத் சந்திரன், ஜாய் மல்யா பக்ஷி அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நடந்து வருகிறது.
நேற்றைய விசாரணையின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தில் நாட்டில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களும் விசாரணைக்காக சேர்க்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றங்களிடம் இருந்து சில முக்கியமான தகவல்களை அரசியல் சாசன அமர்வு எதிர்பார்க்கிறது.
குறிப்பாக, மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து எத்தனை பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்? வழக்கறிஞர்களாக பணியாற்றிய எத்தனை பேர் நேரடியாக நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய விரிவான விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், இந்த விவகாரத்தில் பொதுவான வழிகாட்டு நெறிமுறையை உருவாக்க வேண்டும் என கருதுகிறோம். எனவே, இது தொடர்பான விரிவான விசாரணை அக். 27ம் தேதி நடக்கும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.
- டில்லி சிறப்பு நிருபர் -