உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
ADDED : ஜன 21, 2025 07:15 AM

புதுடில்லி: அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராகவும், அவர் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு எதிராகவும் டில்லி உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என தொடர்ந்து பல நீதிமன்றங்களில் விசாரணைகள் நிலுவையில் இருந்து வருகிறது.
நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை, அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என சூர்யமூர்த்தி, ராம்குமார், ஆதித்யன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையமும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் நடத்தும் விசாரணைக்கு தடை கோரி, அ.தி.மு.க., சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 9ம் தேதி பிறப்பித்த உத்தரவில், தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக ராமச்சந்திரன் என்பவரது தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று, நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இந்த வழக்கு வரும் 27ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. எனவே, தற்போதைய சூழலில் இந்த விவகாரத்தில் இடைக்கால தடை உத்தரவு எதையும் பிறப்பிக்க தேவையில்லை என நாங்கள் கருதுகிறோம்' என, உத்தரவிட்டனர்.
இதையடுத்து, மனுதாரர் வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.