மும்பை 'கபூதர்கானா'வுக்கு தடை தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு
மும்பை 'கபூதர்கானா'வுக்கு தடை தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ADDED : ஆக 12, 2025 03:07 AM
புதுடில்லி: மஹாராஷ்டிராவின் மும்பையில், புறாக்களுக்கு உணவளிக்க தடை விதித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியா, தாதர் உள்ளிட்ட இடங்களில் புறாக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. இந்த இடங்கள், 'கபூதர்கானா' என அழைக்கப் படுகின்றன.
திறந்தவெளியில் புறாக்களுக்கு உணவளிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக தெரிவித்த மும்பை மாநகராட்சி, உணவளிக்க தடை விதித்ததுடன், உணவளிக்கும் இடங்களை இடிக்கவும் முடிவு செய்தது.
இதற்கு எதிராக, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த உயர் நீதிமன்றம், உணவளிக்கும் இடங்களை இடிப்பதற்கு தடை விதித்தது. அதே சமயம், புறாக்களுக்கு உணவளிக்கவும், மீறுவோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம்' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.