அமலாக்க துறைக்கு எதிரான வழக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
அமலாக்க துறைக்கு எதிரான வழக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
ADDED : செப் 27, 2025 12:56 AM
தமிழக டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், அமலாக்கத்துறைக்கு எதிராக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த அவதுாறு வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர்.
பின்னர் இதே விவகாரம் தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழில் அதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டன.
சீல் வைப்பு சோதனையின் முடிவில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான, 'லேப்டாப்' உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதோடு அவரது வீடு மற்றும் அலுவலகங்களுக்கும் சீல் வைத்தனர்.
இதை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட மனுதாரர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்தது.
இதற்கிடையே, இதே விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தீர்ப்பாய அதிகாரிகள் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ் பிறப்பித்திருந்தனர்.
'எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அமலாக்கத்துறை நோட்டீஸ் பிறப்பித்து இருக்கிறது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவுக்கு தடை விதிக்கக் கோரி அமலாக்கத்துறை தீர்ப்பாயம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம், அக்., 5ம் தேதி விசாரணைக்கு வர இருப்பதால் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை ஒத்திவைக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தார்.
ஒத்தி வைப்பு இதைக் கேட்ட நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து இருக்கிறது. அப்படியிருக்கையில், அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தை ஏன் அணுகியது? எதற்காக அச்சம் கொள்கிறீர்கள்?' என, கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறை மூத்த வழக்கறிஞர் ராஜு, ''அவமதிப்பு வழக்கை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. ஆனால், இதில் அவமதிப்பு எதுவுமே இல்லை. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தையும் திரும்ப கொடுத்து விட்டோம்.
''அப்படி இருக்கையில் சென்னை உயர் நீதிமன்றம் தான் அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்து இருக்கிறது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,'' என, கோரிக்கை வைத்தார்.
அப்போது உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், 'சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு தடை ஏதும் விதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் அனைத்து அம்சங்களையும் பார்த்து தான் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
'அதே நேரத்தில், அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது ஆகாஷ் பாஸ்கரன் பதில் அளிக்க வேண்டும்' என, நோட்டீஸ் பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -